சென்னை: சென்னை பெருநகரில் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் சிறப்பு சோதனைகள் மேற்கொள்ள உத்தரவிட்டதன்பேரில், கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், துணை ஆணையாளர்கள் கண்காணிப்பில், உதவி ஆணையாளர்கள் மேற்பார்வையில். காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, தங்களது காவல் நிலைய எல்லைகளில் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்பவர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் கடந்த 19.05.2023 முதல் 25.05.2023 வரையிலான 7 நாட்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, கஞ்சா உள்பட போதை பொருட்கள் கடத்தி வருதல் மற்றும் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தொடர்பாக 23 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 41 குற்றவாளிகள் கைது. 27 கிலோ 955 கிராம் கஞ்சா, 100 கிலோ 70 கிராம் போதை பொருட்கள், 155 உடல்வலி நிவாரண மாத்திரைகள், 10 செல்போன்கள், ரொக்கம் ரூ.270/- மற்றும் 3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதில் குறிப்பிடும்படியாக, N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் 20.05.2023 அன்று பழைய வார்பு, படகு யார்டு அருகில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த 4 நபர்களிடம் விசாரணை செய்தபோது, அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தனர்.
சந்தேகத்தின்பேரில், அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் சூடோஎபிட்ரின் (Pseudoephedrine) என்ற போதை பொருள் மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன்பேரில், சட்டவிரோதமாக போதை பொருள் வைத்திருந்த 1.பிரகாஷ்ராஜ், வ/36, த/பெ.கோவிந்தராஜ், வண்ணாரப்பேட்டை, 2.சம்சுதீன், வ/33, த/பெ.முகமது அலி ஜின்னா, எண்.14, பஜனை கோயில் தெரு, வில்லிவாக்கம், 3.அசைன், வ/36, த/பெ.சையது சாயின்ஷாஅலி, ஜெ.ஜெ.நகர், கொருக்குப்பேட்டை, 4.ராமகிருஷ்ணன், வ/46, தபெ.ரங்கசாமி, வியாசர்பாடி ஆகிய 4 நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100 கிலோ சூடோஎபிட்ரின் (Pseudoephedrine) என்ற போதை பொருள், 6 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
இதே போல, H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 23.05.2023 அன்று மீனாம்பாள் நகர் மேம்பாலம் அடியில், போதை பொருள் வைத்திருந்த சந்தோஷ் (எ) சந்தோஷ்குமார், வ/24, த/பெ.விஜயகுமார், போஜராஜன் நகர், பென்சில் பேக்டரி, 2வது தெரு, பழைய வண்ணாரப்பேட்டை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 70 கிராம் மெத்தம்பெட்டமைன் என்ற போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. R-1 மாம்பலம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 22.05.2023 அன்று மாம்பலம் இரயில் நிலையம் அருகில் சட்டவிரோதமாக கஞ்சா சாரஸ் (Ganja Charas) என்ற போதை பொருள் வைத்திருந்த ஏக்நாத், வ/38, த/பெ.உமேஷ், தாமோதரா தெரு, கொடுங்கையூர், சென்னை என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 200 கிராம் கஞ்சா சாரஸ் பறிமுதல் செய்யப்பட்டது. திருவல்லிக்கேணி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Triplicane) தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 20.05.2023 அன்று பெரியமேடு, மூர்மார்க்கெட் அருகே சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த நவீன்குமார் சௌத்ரி, வ/21, த/பெ.பாலேஸ்வர் சௌத்ரி, ஜார்கண்ட் மாநிலம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.வண்ணாரப்பேட்டை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு (PEW/ Washermenpet) காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் நேற்று (24.05.2023) கொருக்குப்பேட்டை, இரயில்வே ஸ்டேசன் அருகில் சட்டவிரோதமாக விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த ஜானி ஜோசப் பிரகாஷ், வ/34, த/பெ.கிறிஸ்துராஜ், திருச்சி மாவட்டம் என்பவரை கைது செய்தனர்.
அவரிடமிருந்து 5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அடையாறு மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் (PEW/Adyar) தலைமையிலான காவல் குழுவினர் கடந்த 23.05.2023 அன்று கிண்டி ரேஸ் மைதானம் அருகில் கண்காணித்து, சட்ட விரோதமாக கஞ்சா வைத்திருந்த முகமது அசன், வ/19, த/பெ.அபுபெக்கர் சித்திக், கலைமான் நகர், காயல்பட்டினம், திருச்செந்தூர், தூத்துக்குடி மாவட்டம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து 3.2 கிலோ கஞ்சா மற்றும் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. P-6 கொடுங்கையூர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் கடந்த 23.05.2023 அன்று கொடுங்கையூர், ஆர்.ஆர்.நகர், குப்பைமேடு அருகில் கஞ்சா மற்றும் உடல்வலி நிவாரண மாத்திரைகள் வைத்திருந்த 1.வேல்முருகன், வ/20, த/பெ.நடராஜன், நேதாஜி நகர் 6வது தெரு, தண்டையார்பேட்டை, 2.ஆல்பர்ட், வ/24, த/பெ.ஜான் சகாயராஜ், என்.எஸ்.கே.காலை, சீதாராமன் நகர் 1வது தெரு, கொடுங்கையூர், 3.ராஜேஷ் (எ) சின்ன பாம்பு, வ/22, த/பெ.ஆறுமுகம், எம்.ஜி.ஆர். நகர் 3வது தெரு, கொடுங்கையூர் ஆகிய 3 நபர்களை கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 250 கிராம் கஞ்சா மற்றும் 155 டைடல் உடல்வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்களின் உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், இணை ஆணையாளர்கள் ஆலோசனையின்பேரில், காவல் துணை ஆணையாளர்கள் மேற்பார்வையில், உதவி ஆணையாளர்கள் தலைமையில், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் மற்றும் ஆளிநர்கள் அடங்கிய காவல் குழுவினர், தீவிர விசாரணை மற்றும் தனிக்கவனம் செலுத்தி கடந்த 2021ம் ஆண்டு முதல் நடப்பாண்டு இதுவரையில், கஞ்சா மற்றும் போதை பொருட்கள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 699 வழக்குகளில் சம்பந்தப்பட்ட 1,567 குற்றவாளிகளின் சொத்து மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் சேகரித்து, சட்டரீதியாக முடக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டு இதுவரையில் மொத்தம் 821 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல்துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளார்.