புதுடெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விவகாரத்தில் அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து துறையில் பணியமர்த்த பணம் பெற்ற விவகாரம் தொடர்பாக சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். இதையடுத்து அவரை ஆஜர்படுத்தக்கோரி அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி மாறுப்பட்ட தீர்ப்புகளை வழங்கினர். இதைத்தொடர்ந்து வழக்கை விசாரித்த மூன்றாவது நீதிபதி அமலாக்கத் துறையால் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதமானதல்ல என கடந்த 14ம் தேதி தீர்ப்பளித்தார்.
இதை எதிர்த்து, செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து மேற்கண்ட இரு மேல்முறையீட்டு மனுக்களும் உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் போபண்ணா மற்றும் எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதையும், மூன்றாவது நீதிபதி வழங்கிய தீர்ப்பு குறித்த விவரங்களையும் எடுத்துரைத்தார்.
மேலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகளாக இல்லாமல் இருக்கும் பட்சத்தில் அவர்களால் கிரிமினல் குற்ற நடைமுறைச் சட்டம் பிரிவு 167 ன் கீழ் யாரையும் கைது செய்து காவலில் எடுக்க முடியாது. கைது செய்யப்படும் நபரை நீதிமன்ற காவலுக்கு மட்டும் தான் அனுப்ப முடியும் என்றும், அதுவும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது என்றால் நீதிமன்ற காவலுக்கும் அனுப்ப முடியாது. இரண்டில் ஏதாவது ஒன்றை தான் கணக்கில் கொள்ள முடியும். மேலும் செந்தில் பாலாஜிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் நீதிமன்ற காவல் வழங்குவதிலிருந்தும் விலக்கு அளிக்க வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து அமலாக்கத்துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா,’ஒரு நபரை கைது செய்வது என்பது விசாரிப்பதற்காக தானே தவிர, அவரை வெறுமென நீதிமன்ற காவலில் வைப்பதற்கு கிடையாது. அப்படி வைப்பதில் எந்தவிதமான பலனும் இல்லை. மேலும் கைது என்பது ஒரு குறிப்பிட்ட தேவைக்காக மட்டும் தான். பழி வாங்கும் நோக்கத்தில் இருக்க கூடாது. இதே விவகாரத்தில் ஜாமீன் பெறுகிறார்கள் என்றால் கைது செய்த அதிகாரிகளை காவல்துறை அதிகாரிகளாக தான் பார்க்க முடியும். இது தொடர்பான ஏராளமான வழக்குகளில் நீதிமன்றங்கள் தீர்ப்பும் வழங்கி இருக்கிறது.
மேலும் 15 நாட்களுக்கு மேலாக அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தாலும் சிகிச்சைக்கு பின்னர் அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. நீதிமன்றம் கொடுத்த அதிகாரத்தை எப்படி அவர்களால் மறுத்து பேச முடியும். விசாரிப்பது என்பது எங்களது கடமை மட்டும் கிடையாது ,சட்ட உரிமையும் ஆகும் என தெரிவித்தார். அப்போது, செந்தில் பாலாஜி தரப்பு வக்கீல் கபீல் சிபல், அதுவரை செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று கோரினார்.
அப்போது சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தா, செந்தில் பாலாஜியின் 15 நாள் கஸ்டடி எப்போது துவங்கும் என்பதை டிவிசன் பெஞ்ச் முடிவு செய்யும் என்று 3வது நீதிபதி கூறியுள்ளார். அப்படியிருக்கும்போது எங்களால் எப்படி காவலில் எடுக்க முடியும் என்றார். ஒருவேளை டிவிசன் பெஞ்ச் செந்தில் பாலாஜிக்கு எதிராக தீர்ப்பளித்தால், நாங்கள் எங்கு சென்று முறையீடுவோம் என்று கபில் சிபல் கூறினார். அதற்கு நீதிபதிகள் அப்படி எதுவும் நடக்காது என்று கூறி இந்த விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிப்பதாக உத்தரவிட்டு வழக்கை வரும் 26 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.