வாஷிங்க்டன் : அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப் தன் மீதான மோசடி வழக்கு விசாரணையின் போது, நியூயார்க் மாவட்ட நீதிமன்ற நீதிபதியையும் அரசு வழக்கறிஞரையும் எதிர்மறையாக விமர்சனம் செய்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறார். டிரம்ப் மற்றும் அவரது குடும்ப வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளவர்களும் தொழிலின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நிதி அறிக்கைகளில் சொத்துகளின் மதிப்பை மோசடியான முறையில் உயர்த்தியது கண்டறியப்பட்டதாக நியூயார்க் நீதிபதி ஆர்தர் எங்கோரன் தெரிவித்திருந்தார். இது தொடர்பாக நியூயார்க் மாகாண அட்டர்னி ஜெனரல் லெட்டிசியா ஜேம்ஸ் டிரம்புக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார்.
மோசடி குற்றத்துக்காக அவருக்கு ரூ.2050 கோடி அபராதம் மற்றும் நியூயார்க்கில் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என அவர் கோரி உள்ளார். டிரம்ப் மீதான இந்த வழக்கு விசாரணை நேற்று நியூயார்க் நீதிமன்றத்தில் தொடங்கியது. விசாரணையில் டிரம்ப் நேற்று ஆஜரானார். அப்போது ட்ரம்பிற்கு ரூ.2,050 கோடி அபராதம் விதிக்கவும் வர்த்தகத்தில் ஈடுபட தடை விதிக்க வேண்டும் என்றும் அரசு வழக்கறிஞர் வாதிட்டார்.
பின்னர் உணவு இடைவெளியின் போது, நீதிமன்றத்திற்கு வெளியே செய்தியாளர்களை சந்தித்த ட்ரம்ப், அரசு வழக்கறிஞர் ஜேம்ஸ் ஓர் ஊழல் வாதி என பரபரப்பு குற்றம் சாட்டினார். தொடர்ந்து பேசிய அவர், நியுயார்க் மாவட்ட நீதிமன்ற நீதிபதியையும் கடுமையாக சாடினார். நீதிபதி ஆர்தர் பதவி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்ற அவர், நீதிபதியாக அவரை தொடர அனுமதிக்கக் கூடாது என்றார்.அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் முன்னணியில் இருப்பதால் தனது புகழுக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சதி திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார். நீதிமன்ற வளாகத்திலேயே மாவட்ட நீதிபதி மற்றும் அரசு வழக்கறிஞரை ட்ரம்ப் எதிர்மறையாக விமர்சனம் செய்து இருப்பது அமெரிக்கா முழுவதும் கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.