புதுடெல்லி: மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காத விவகாரத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த ரிட் வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. தமிழ்நாடு அரசு தரப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடந்த வாரம் உச்ச நீதிமன்றத்தில் இரு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
அதில், ‘‘சர்க்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியல் அமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் பரிசீலிப்பதற்கான காலவரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதலை உச்ச நீதிமன்றம் உடனடியாக வகுக்க வேண்டும்.
மேலும், தமிழக சட்டப்பேரவை மூலம் அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரையுடன் கூடிய ஒரு உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று ஒரு மனுவிலும், இதேப்போன்று மற்றொரு மனுவில், ‘‘ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறார்.
சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்கிறார். மாநில அரசின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறார். குறிப்பாக பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தர் தேடுதல் குழு போன்றவற்றில் தேவையில்லாமல் ஆளுநர் ஆர்.என்.ரவி மூக்கை நுழைத்து அரசின் பரிந்துரைகளை ஏற்காமல் தேவையில்லாமல் காலதாமதம் செய்கிறார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து இந்த மனுக்கள் அனைத்தும் உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.