மதுரை: கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூரை சேர்ந்தவர் கிறிஸ்துதாஸ். இவர் கடந்த 1989ல் கூட்டுறவு சங்க மூத்த ஆய்வாளராகவும், பின்னர் பதவி உயர்வு பெற்று, 2019ல் பால்வளத்துறையில் கூடுதல் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில், தொடக்க பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவேடுகள் தொடர்பாக கொள்முதல் தணிக்கை நடந்தது. இதில், கிறிஸ்துதாஸ், பால் கூட்டுறவு சங்கங்களுக்கு ரூ.1 கோடியே 75 லட்சத்து 33 ஆயிரத்து 953 இழப்பு ஏற்படுத்தியதாக தணிக்கை குழு அறிக்கை சமர்ப்பித்தது. இதை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து அப்போதைய பல்வளத்துறை இயக்குனர் சி.காமராஜ், அப்போதைய கமிஷனர் வள்ளலார் மற்றும் கிறிஸ்துதாஸ் ஆகியோர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தது. இதையடுத்து கிறிஸ்துதாஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
அவரை பணியிலிருந்து ஓய்வு பெற அனுமதி மறுத்து 2022 மே 20 மற்றும் 31ல் கால்நடை மற்றும் பால்வளத்துறை உத்தரவிட்டது. அதை ரத்து செய்து ஓய்வு பெற அனுமதித்து, அதற்குரிய பணப்பலன்களை வழங்க உத்தரவிடக்கோரி கிறிஸ்துதாஸ் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு: பால் கூட்டுறவு சங்கங்களுக்கான பதிவேடுகளை வாங்குவதில் முறைகேடு நடந்துள்ளது. 1946ல் குஜராத்தில் தொடங்கப்பட்ட அமுல் நிறுவனம் கடந்த 2023-24ல் அமுல் ரூ.59 ஆயிரத்து 259 கோடிக்கு வியாபாரம் செய்துள்ளது. 1958ல் நிறுவப்பட்ட ஆவின், 2023-24ல் ரூ.7 ஆயிரம் கோடிக்கு மட்டுமே வணிகம் செய்துள்ளது. பால் கொள்முதல் மற்றும் வருவாயில் ஆவின், அமுல் இடையே மிகப்பெரிய வேறுபாடு உள்ளது.
இப்பின்னடைவிற்கான காரணங்களை இவ்வழக்கு மூலம் கண்டறியலாம். துறையில் நிலவும் ஊழல் காரணமாக இருக்கலாம். இவ்வழக்கில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கு (காமராஜ், வள்ளலார்) எதிராக பொதுத்துறையில் ஒரு தனி நடவடிக்கை துவங்கப்பட்டது. அது அப்போதைய தலைமைச் செயலரால் முடித்து வைக்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த காரணங்களை இந்த நீதிமன்றத்தால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஊழல் செய்த அமைச்சர்கள் மீது வழக்கு பதியப்படுகிறது. துறைகளுக்கு தலைமை வகிக்கும் தவறு செய்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. ஊழல் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க எந்த வழிமுறையும் இல்லை. அரசு தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்பு கமிஷனர் தவறு செய்யும் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை விசாரிப்பதில் தைரியம், உறுதியை கொண்டிருக்க வேண்டும்.
ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மிக சக்திவாய்ந்தவர்கள். தவறு செய்த ஒரு ஐ.ஏ.எஸ்., அதிகாரி கூட இதுவரை தண்டிக்கப்பட வில்லை. இம்மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு எதிராக ஏற்கனவே துவங்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கையை 3 மாதங்களில் முடிக்க வேண்டும். குற்றச்சாட்டிற்கான முகாந்திரத்திற்கு ஆதாரங்கள் இருப்பதால் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் சி.காமராஜ், வள்ளலார் மற்றும் மனுதாரர் மீது குற்றவியல் வழக்கு பதிவு செய்ய வேண்டும். சட்டப்படி அடுத்தகட்ட மேல் நடவடிக்கையை சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் மேற்கொள்ள வேண்டும். இவ்விவகாரத்தில் முறைகேடு, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் விடுவிக்கப்பட்ட விதம் குறித்து விசாரித்து உரிய நடவடிக்கையை ஒன்றிய அரசின் ஊழல் கண்காணிப்பு கமிஷனர் மேற்கொள்ள வேண்டும். ஊழலுக்கு எதிராக சகிப்புத்தன்மை இல்லாத அரசின் கொள்கை நிலைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.