திருவனந்தபுரம்: சமூக வலைதளம் மூலம் மத ஒற்றுமையை சீர்குலைக்க முயற்சித்ததாக கூறப்பட்ட புகாரில் ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது எர்ணாகுளம் போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர். ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருப்பவர் ராஜீவ் சந்திரசேகர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு கேரள மாநிலம் கொச்சி களமசேரியில் கிறிஸ்தவ ஜெபக் கூட்டத்தில் நடந்த குண்டுவெடிப்பில் ஒரு குறிப்பிட்ட மதத்திற்கு தொடர்பு இருக்கலாம் என்று கூறி தனது முகநூலில் இவர் சில கருத்துக்களை வெளியிட்டதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில் அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மீது எர்ணாகுளம் மத்திய போலீஸ் வழக்கு பதிவு செய்து உள்ளது. அனில் ஆண்டனி மீதும் வழக்கு : கேரளாவில் பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்லும் பஸ்சை முஸ்லிம் மாணவிகள் சிலர் வழிமறித்த சம்பவம் தொடர்பான வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்த பாஜ தேசிய செய்தித் தொடர்பாளர் அனில் ஆண்டனி கேரளாவில் ஒரு பஸ்சில் மாற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை பர்தா அணியச் சொல்லி சில இளம்பெண்கள் வாக்குவாதம் செய்வதாக பதிவிட்டிருந்தார். இதையடுத்து அனில் ஆண்டனி மீது காசர்கோடு போலீசார் தற்போது வழக்கு பதிவு செய்துள்ளனர்.