சென்னை: புழல் மத்திய சிறையில் நேற்று முன்தினம் காவலர்களை தாக்கிய 6 கைதிகள் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புழல் மத்திய சிறையின் விசாரணை பிரிவில், சுமார் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு இருந்தும், கைதிகளிடையே செல்போன் மற்றும் குட்கா, கஞ்சா போன்ற பல்வேறு போதை பொருட்களின் நடமாட்டம் இருந்து வருகிறது.இந்நிலையில், சென்னை புழல் மத்திய சிறையில் விசாரணை பிரிவு பகுதியில் காவலர்கள் அதிரடி சோதனை நடத்தினர்.
இதில், ஒரு கழிவறையில் இருந்த பேப்பர் பண்டலை பிரித்து பார்த்தபோது, அதற்குள் ஒரு செல்போன் இருப்பது தெரியவந்தது. அந்த செல்போனை பறிமுதல் செய்தபோது, விசாரணை கைதிகளான ஆல்வின் ஞானதுரை, விக்னேஸ்வரன், பூபாலன், டேவிட்ராஜா, ஸ்ரீகுமார், அருண் ஆகிய 6 பேரும் சிறைக் காவலரிடம் வாய்த்தகராறில் ஈடுபட்டு தாக்க முயற்சித்ததாக கூறப்படுகிறது.
அவர்களை சக காவலர்கள் சமரசம் செய்தனர். இதேபோல் தண்டனை பிரிவில் சிறைக் காவலர்கள் சோதனை நடத்தியபோது, அங்கு மரத்தடியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த ஒரு செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது. இதுகுறித்து, புழல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின்பேரில், போலீசார் சிறைக் காவலரை பணி செய்யவிடாமல் தாக்க முயற்சித்த 6 கைதிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.