புதுடெல்லி: அசாம் மாநிலத்திற்குள் நுழையும் சட்டவிரோத வங்கதேசத்தவர்களை தடுத்து நிறுத்தி உடனடியாக விரட்டியடிக்கப்படும் என்று அசாம் அரசு முடிவு செய்துள்ளது. மேலும் இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளும் விதமாக புஷ் பேக் பாலிசி என்ற திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது கடந்த சில மாதங்களாக நடைமுறையில் இருந்து வருகிறது. குறிப்பாக பாஜ தலைமையிலான அசாம் அரசு, அதன் வகுப்புவாதக் கொள்கைகளை ஆக்ரோஷமாகப் பின்பற்றி வருகிறது என்று எதிர்கட்சிகள் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தனர். இந்த நிலையில் மேற்கண்ட கொள்கைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவானது நீதிபதிகள் அசானுதீன் அமனுல்லா மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே ,\\” இதுபோன்ற நடவடிக்கை என்பது ஏழை மற்றும் ஓரங்கட்டப்பட்ட குடிமக்களை, முறையான சட்ட உதவி இல்லாமல் நாடற்றவர்களாக மாற்றக்கூடும். எனவே இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு அசாம் மாநில அரசின் நடவடிக்கைக்கு தடை விதிக்க வேண்டும் என்று தெரிவித்தார். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘‘ இந்த மனுவை விசாரிக்க முடியாது. குறிப்பாக அசாம் மாநில அரசு கொண்டு வந்துள்ள புஷ் பேக் பாலிசி விவகாரத்தில் நாங்கள் தற்போது தலையிட்டு எந்தவித உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. மேலும் மனுதாரர் முதலில் ஏன் சம்பந்தப்பட்ட (கவுகாத்தி) உயர்நீதிமன்றத்தை அணுகவில்லை என்பது எங்களது முக்கிய கேள்வியாக இருக்கிறது.
முதலில் அவர்கள் விசாரணை நடத்தி முடிக்கப்படும். அதில் பிறப்பிக்கப்படும் உத்தரவில் ஏதேனும் உங்களுக்கு எதிர்மறையாக இருந்தால் உச்ச நீதிமன்றத்தை மீண்டும் நாடலாம். அதற்கு அனுமதி வழங்குகிறோம் என்று திட்டவட்டமாக தெரிவித்தனர். அப்போது குறுக்கிட்ட மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், ‘‘இதுதொடர்பான மனுவை திரும்பப்பெறுவதாக நீதிபதிகள் முன்னிலையில் கோரிக்கை வைத்தார். இதையடுத்து அதனை ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், ‘‘மனுவை தள்ளுபடி செய்து ரிட் வழக்கை முடித்து வைத்தனர்.