திருமலை: ஆந்திராவில் நடந்த கலவரம் தொடர்பாக முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதில், 10 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், எதிர்கட்சி தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த வாரம் சித்தூர் மாவட்டம், புங்கனூரில் சுற்றுப்பயணத்தின் ஒருபகுதியாக ரோட் ஷோ மேற்கொண்டார். அப்போது, அன்னமய்ய மாவட்டம், தம்பல்லப்பள்ளி தொகுதிக்கு உட்பட்ட அங்கல்லுவில் சந்திரபாபு பேசி கொண்டிருந்தபோது ஒய்எஸ்ஆர். காங்கிரஸ் கட்சியினர் சிலர் அங்கு வந்ததால் தெலுங்கு தேசம் கட்சியினர் கலவரத்தில் ஈடுபட்டனர். அதனை தடுத்த போலீசார் பலரை தாக்கி காயப்படுத்தியதோடு, போலீஸ் வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய 72 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இந்நிலையில், வன்முறையை தூண்டும்விதமாக பேசி கட்சி தொண்டர்களை வைத்து போலீசார் மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10 பிரிவுகளின் கீழ் சந்திரபாபு நாயுடு உட்பட 20 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.