கோவை: அதிமுக நிர்வாகியும், பிரபல தொழிலதிபருமான ஆற்றல் அசோக்குமார் மீது, பள்ளியில் போலி ஆவணங்கள் தயாரித்து மோசடி செய்ததாக கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை இந்தியன் பப்ளிக் பள்ளி நிர்வாக இயக்குனராக இருந்தவர் ஆற்றல் அசோக்குமார். 2006ம் ஆண்டு முதல் நிர்வாக இயக்குனராக இருந்த ஆற்றல் அசோக்குமார் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் ஈரோடு தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதிமுகவில் சேர்ந்த 4 மாதங்களில் அவருக்கு சீட் கொடுக்கப்பட்டது அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பாஜ எம்எல்ஏ சி.ஆர்.சரஸ்வதியின் மருமகனான ஆற்றல் அசோக்குமார் தனது சொத்து மதிப்பு ரூ.683 கோடி என தேர்தலின்போது கணக்கு காட்டி இருந்தார். இந்நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி ஆற்றல் அசோக்குமார், பள்ளிக்கு நஷ்டம் ஏற்படுத்தியதாக நிர்வாக இயக்குனர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். அனைத்து அதிகாரங்களும் திரும்ப பெறப்பட்ட நிலையில் அவருக்கு பதிலாக ஜெயராம் பாலகிருஷ்ணன் மற்றும் சிவசங்கரன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். புதிய நிர்வாகிகள் பள்ளி ஆவணங்களை ஆய்வு செய்தனர். அப்போது ஆற்றல் அசோக்குமார் போலியான ஆவணங்களை காட்டி 45 பஸ்கள் வாங்க, வங்கி மற்றும் தனியார் நிதி நிறுவனங்களில் பணம் பெற்றது தெரியவந்தது.
பஸ்சின் அசல் விலையைவிட கூடுதல் விலைக்கு வாங்கியதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அவர் கடந்த பிப்ரவரி 28ம் தேதி நிர்வாக இயக்குனர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியதுபோல போலியான ஆவணங்களை தயாரித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து இந்தியன் பப்ளிக் பள்ளி நிர்வாக இயக்குனர் சிவசங்கரன் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார், அதிமுக நிர்வாகி ஆற்றல் அசோக்குமார் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.