*சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு
திண்டிவனம் : ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ள திண்டிவனம் கிடங்கல் ஏரியை மீட்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தின் மையப் பகுதியில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான கிடங்கல் ஏரி உள்ளது. 2500 ஏக்கர் பரப்பளவைக் கொண்டுள்ள இந்த ஏரியின் நீர்பிடிப்பு 250 மில்லியன் கன அடி ஆகும். இந்த நீரின் மூலம் 1350 ஏக்கர் விவசாய நிலம் பயன் பெற்று வந்தன. இந்த கிடங்கல் ஏரிக்கு ஐந்து கிராம எல்லையில் இருந்து நீர் வரத்து உள்ளது. மரக்காணம் பகுதியில் உள்ள கழுவெளி அணைக்கு முக்கிய நீர் ஆதாரமாகவும் இந்த கிடங்கல் ஏரி அமைந்திருந்தது.
இந்த நிலையில் கிடங்கல் ஏரியில் மூன்றில் இரண்டு பங்கு அளவிற்கு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு கட்டிடங்கள் உள்ளன. இது ஒருபுறம் இருக்க, இந்த ஏரியை குப்பை கொட்டும் இடமாக நகராட்சி நிர்வாகம் மாற்றி உள்ளது. இதனால் ஏரியின் பரப்பு குறைந்தும், ஏரியில் மழைக்காலங்களில் நீர் வந்தால் ஆக்கிரமிப்பாளர்கள் பாதிக்கப்படாமல் இருக்க ஆங்காங்கே ஏரிக்கரைகளை உடைத்து நீரை வெளியேற்றுவது தொடர் கதையாக நடந்து வருகிறது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு பெய்த லேசான மழைக்கே இந்த ஏரி நிரம்பியதால் ஆக்கிரமிப்பாளர்கள் கரைகளை உடைத்து நீரை வெளியேற்றியுள்ளனர். இந்த நீரானது தொடர்ந்து வெளியேறி வருகிறது.கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.161 கோடி மதிப்பீட்டில் கிடங்கல் ஏரி மற்றும் வரத்து வாய்க்கால் தூர்வாரப்பட்டு மரக்காணம் பகுதியில் உள்ள கழுவெளியில் அணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டது. இந்த நிதியில் கழுவெளி பகுதியில் தடுப்பணை கட்டியதோடு சரி. கிடங்கல் ஏரியை தூர் வாரவும் இல்லை.
வரத்து வாய்க்காலில் வெங்காய தாமரை அகற்றப்படாமல் ஆக்கிரமிப்பாளர்கள் பிடியில் உள்ளது. இந்த கிடங்கல் ஏரியிலிருந்து 26 ஏரிகளுக்கு நீர் செல்கிறது. அவ்வாறு உள்ள இந்த கிடங்கல் ஏரி மிகை நீர் வழிந்தோடி செல்லும் வரத்து வாய்க்காலில் சமாதிகள் பல கட்டப்பட்டு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி உள்ள கிடங்கல் ஏரியை மீட்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.