*எஸ்பி உத்தரவின்பேரில் நடவடிக்கை
ஆம்பூர் : ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசத்தில் ஈடுபட்ட 3 இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். மேலும், ரீல்ஸ் மோகத்தால் இச்செயலில் ஈடுபட்ட அவர்களுக்கு அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தனர்.
சமூக வலைதளங்களில் `லைக்’ பெற வேண்டும், புகழ் பெற வேண்டும் என்பதற்காக இளைஞர்கள் சிலர் பைக் சாகசங்களில் ஈடுபட்டு, அதனை வீடியோ எடுத்து பதிவிட்டு வருகின்றனர். இதுபோன்ற விதி மீறல்களில் ஈடுபடும்போது விபத்தில் சிக்கி படுகாயம் அடைவதும், உயிரிழப்பு ஏற்படுவதும் வாடிக்கையாக உள்ளது. அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி கடந்த 2 நாட்களுக்கு முன்பு தேசிய நெடுஞ்சாலையில் இளைஞர்கள் சிலர் பைக்கில் சென்றனர்.
அப்போது, ரீல்ஸ் வெளியிடுவதற்காக ஆபத்தான முறையில் பைக்கில் வீலிங் செய்தபடி சென்றனர். இதனை தொடர்ந்து வந்த இளைஞர்கள் சிலர் வீடியோ எடுத்தபடி, அவர்களும் அதிவேகமாக சென்றனர். இளைஞர்களின் பைக் சாகசத்தை கண்டு அச்சமடைந்த அவ்வழியாக சென்ற மக்கள் அவர்களை கடுமையாக விமர்சித்தனர். ஆனால், அந்த இளைஞர்கள் அதனை பொருட்படுத்தவில்லை. இதற்கிடையில், இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
இதையறிந்த எஸ்பி ஸ்ரேயா குப்தா இதுகுறித்து நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் ஆம்பூர் தாலுகா போலீசார் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். அப்போது, பைக் சாகசத்தில் ஈடுபட்ட அந்த இளைஞர்கள் தங்களது வாகனத்தின் நம்பர் பிளேட்டை மறைத்தும், முகத்தை மாஸ்க் அணிந்து மறைந்தபடியும் சென்றதால் அவர்களை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து, போலீசார் வேறு வழியில் கண்டறியும் பணியில் ஈடுபட்டனர். அதில், ரீல்ஸ் வெளியிடுவதற்காக இதுபோன்ற விதிமீறலில் ஈடுபட்டது வாணியம்பாடி நேதாஜி நகரை சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரியவந்தது. உடனே, போலீசார் அந்த இளைஞர்கள் 3 பேரையும் பிடித்து நேற்று முன்தினம் ஆம்பூர் தாலுகா காவல் நிலையம் அழைத்து வந்தனர். பின்னர், இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் அந்த இளைஞர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
தொடர்ந்து போலீசார், அந்த இளைஞர்கள் 3 பேர் மீதும் ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டியது, அஜாக்கிரதையாக அதிவேகமாக வாகனத்தை இயக்கியது, உரிய உரிமம் இல்லாதது, விதியை மீறி இருசக்கர வாகனத்தில் 3 பேர் பயணித்தது என பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். பின்னர், அந்த இளைஞர்களின் பெற்றோர்களையும் அழைத்து எச்சரிக்கை விடுத்து, அவர்களுடன் அனுப்பி வைத்தனர்.
வீடியோக்களை காட்டி எச்சரித்த போலீசார்
ரீல்ஸ் மோகத்தில் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான முறையில் பைக்கில் வீலிங் செய்தபடி சென்றதாக பிடிபட்ட வாலிபர்களை போலீசார் எச்சரித்ததுடன் அவர்களை நல்வழிப்படுத்த, ஏற்கனவே இதுபோன்ற சாகசங்களில் ஈடுபட்டு கை, கால்களை இழந்து தவித்து வரும் பலரது வீடியோக்களை காண்பித்து அறிவுரை வழங்கினர். உடனே, அந்த இளைஞர்கள் தங்களது தவறை உணர்ந்து போலீசாரிடம் மன்னிப்பு கோரினர். இனிவரும் காலங்களில் இதுபோன்ற விபரீத செயல்களில் ஈடுபட மாட்டோம் என உறுதி அளித்தனர்.