ஊட்டி : சாலையோரங்களில் கேரட் கழிவுகள் கொட்டப்படுவதால் காட்டு மாடுகள் பொதுமக்கள் வாழும் பகுதிக்கு வர வாய்ப்புள்ளது.நீலகிரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தற்போது வனவிலங்குகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது.
சிறுத்தை, கரடி, யானை, புலி, காட்டு மாடுகள் மற்றும் பன்றிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது மட்டுமின்றி இவைகள் உணவு தேடி நாள் தோறும் மக்கள் வாழும் பகுதிக்கு வருவதால் மனித வனவிலங்கு மோதல் ஏற்பட்டு பொதுமக்கள் பாதித்து வருகின்றனர்.
குறிப்பாக காட்டு மாடுகள், கரடிகள் மற்றும் சிறுத்தை போன்ற வனவிலங்குகள் தற்போது நாள்தோறும் மக்கள் வாழும் பகுதிக்குள் வருவதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
விவசாய தோட்டங்களுக்கு வரும் காட்டுமாடுகள் அங்குள்ள பயிர்களை சேதம் செய்கின்றன. மேலும், குடியிருப்புகளுக்கு அருகிலும், ஊருக்குள் வருவதால் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.இந்நிலையில், கேத்தி பாலாடா, முத்தோரை பாலாட உள்ளிட்ட சில பகுதிகளில் ஏராளமான கேரட் கழுவும் இயந்திரங்கள் உள்ளன.
இந்த கேரட் கழுவும் இயந்திரங்களில் மூட்டைகள் பிடித்த பின் எஞ்சி நிற்கும் கேரட் கழிவுகள் அங்குள்ள சாலை ஓரங்களில் கொட்டப்படுகிறது. இவைகளை உட்கொள்வதற்காக கால்நடைகள் மட்டும் இன்றி தற்போது காட்டு மாடுகள் மற்றும் கரடி போன்ற வனவிலங்குகளும் வரத் துவங்கி விட்டன.
இவைகள் பகல் நேரங்களில் வருவதால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முத்தோரை பாலாடா பகுதியில் சாலை ஓரங்களில் கொட்டப்பட்டுள்ள கேரட் கழிவுகளை உட்கொள்ள காட்டு மாடுகள் மற்றும் கரடி போன்ற வனவிலங்குகள் வர வாய்ப்புள்ளது.
இது மட்டுமின்றி, இவைகள் மழைக்காலங்களில் அழுகி கடும் துர்நாற்றம் வீசுவதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. எனவே, இவைகளை அகற்ற வேண்டும். மேலும், சாலையோரங்களில் மற்றும் மக்கள் வாழும் பகுதிகள் அருகே இதுபோன்று கேரட் கழிவுகள் கொட்டாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.