நியூயார்க்: யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட, செக் குடியரசு வீராங்கனை கரோலினா முச்சோவா தகுதி பெற்றார். 4வது சுற்றில் இத்தாலியின் ஜாஸ்மின் பவோலினியுடன் மோதிய கரோலினா 6-3, 6-3 என்ற நேர் செட்களில் எளிதாக வென்று (1 மணி, 9 நிமிடம்) காலிறுதிக்கு முன்னேறினார். மற்றொரு 4வது சுற்றில் நம்பர் 1 வீராங்கனை இகா ஸ்வியாடெக் (போலந்து) 6-4, 6-1 என்ற நேர் செட்களில் ரஷ்யாவின் சாம்சனோவாவை வீழ்த்தினார். பிரேசிலின் ஹடாட் மாயா சவாலை சந்தித்த டென்மார்க் நட்சத்திரம் கரோலின் வோஸ்னியாக்கி 2-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் 2 மணி, 41 நிமிடம் போராடி தோற்றார். அமெரிக்காவின் ஜெஸ்ஸிகா பெகுலாவும் காலிறுதிக்கு முன்னேறி உள்ளார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் விளையாட நம்பர் 1 வீரர் யானிக் சின்னர் (இத்தாலி), டேனியல் மெட்வதேவ் (ரஷ்யா), அலெக்ஸ் டி மினார் (ஆஸி.), ஜாக் டிரேப்பர் (இங்கிலாந்து) தகுதி பெற்றுள்ளனர். கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா – அல்டிலா சுத்ஜியாடி (இந்தோனேசியா) இணை 7-6 (7-4), 2-6, 10-7 என்ற செட் கணக்கில் மேத்யூ எப்டன் (ஆஸ்திரேலியா) – பார்போரா கிரெஜ்சிகோவா (செக் குடியரசு) ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது. இன்று நடைபெறும் அரையிறுதியில் போபண்ணா இணை, அமெரிக்காவின் டெய்லர் டவுன்செண்ட் – டொனால்டு யங் இணையுடன் மோத உள்ளது.