ஸ்டாவஞ்சர்: கிளாசிகல் செஸ் வரலாற்றில் முதல் முறையாக உலக நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சனை, இந்தியாவை சேர்ந்த உலக செஸ் சாம்பியன் குகேஷ் நேற்று வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். நார்வேயின் ஸ்டாவஞ்சர் நகரில் கிளாசிகல் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளின் புள்ளிப் பட்டியலில் துவக்கம் முதல் மேலே உள்ள நார்வேயை சேர்ந்த, உலகின் நம்பர் 1 வீரர் மேக்னஸ் கார்ல்சன், உலக செஸ் சாம்பியன் குகேஷ் உடன் நேற்று மோதினார். போட்டியின் துவக்கத்தில் வலுவான நிலையில் இருந்த கார்ல்சனின் பிடி, போகப் போக நழுவத் துவங்கியது. கடைசியில் போட்டியின் திசை மாறி, குகேஷ் அபார வெற்றி பெற்று கார்ல்சனுக்கு அதிர்ச்சி அளித்தார். நம்ப முடியாத அந்த வெற்றியால் குகேஷ் இருக்கையில் இருந்து எழுந்து இரு கைகளை உற்சாகமாக ஆட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அதேசமயம், வெல்ல வேண்டிய போட்டியில் தோற்ற ஆத்திரத்தில் தன் முன் இருந்த டேபிள் மீது தன் கையால் கார்ல்சன் ஓங்கிக் குத்தி தன்னைத் தானே நொந்து கொண்டார். போட்டிக்கு பின் குகேஷ் கூறுகையில், ‘100ல் 99 முறை நான் தோற்றிருப்பேன். இன்று அதிர்ஷ்ட நாளாக இருந்ததால் வெற்றி பெற்றுள்ளேன்’ என தன்னடக்கத்தோடு கூறினார். கார்ல்சனை வென்றதால் குகேஷுக்கு 3 புள்ளிகள் கிடைத்தன. நேற்றைய போட்டி முடிவில், கார்ல்சன், அமெரிக்க வீரர் பேபியானோ கரவுனா ஆகிய இருவரும் தலா 9.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர். குகேஷ், 8.5 புள்ளிகளுடன் 3ம் இடத்தில் உள்ளார். நேற்று நடந்த மற்றொரு போட்டியில் சீன கிராண்ட் மாஸ்டர் வெ யியை இந்திய கிராண்ட் மாஸ்டர் அர்ஜுன் எரிகேசி வீழ்த்தினார்.
ஹம்பியை வீழ்த்திய தமிழகத்தின் வைஷாலி
மகளிர் பிரிவில் நேற்று நடந்த கிளாசிகல் செஸ் போட்டியில் இந்திய கிராண்ட் மாஸ்டர் கொனேரு ஹம்பியை, தமிழகத்தை சேர்ந்த இந்திய வீராங்கனை வைஷாலி தோற்கடித்தார். அதனால் 8 புள்ளிகளுடன் புள்ளிப் பட்டியலில் வைஷாலி 3ம் இடம் பிடித்தார். கொனேரு ஹம்பியும், உக்ரைன் வீராங்கனை அன்னா முஸிசுக்கும் 9.5 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளனர்.