மும்பை : கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் செயின் கிட்ஸ் பேட்ரியாட்ஸ் அணியின் சார்பாக விளையாடிய அதிரடி வீரர் ஈவின் லிவிஸ் 54 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். இதில் ஒன்பது இமாலய சிக்ஸர்களும் 7 பவுண்டரிகளும் அடங்கும். செயின்ட் லூசியா கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பேட்டிரியாட்ஸ் அணி கேப்டன் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனையடுத்து 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஈவின் லிவிஸ் மற்றும் கெயில் மெயர்ஸ் ஜோடி அதிரடியாக ஆடினர். ஈவன் லிவிஸ் 24 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய ஈவின் லிவிஸ் 54 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். மறுமுனையில் கெயில் மெயர்ஸ் 92 ரன்களில் வெளியேறினார். இந்த ஜோடி 2வது விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 2019 ஆம் ஆண்டு 2வது விக்கெட்டுக்கு கிறிஸ் கெயில் – சாட்டவிக் வால்டர் ஜோடி 162 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த சாதனையை இந்த ஜோடி முறியடித்து இருக்கிறது. இதன் மூலம் செயிண்ட் லூயிஸ் பேட்டரியாட்ஸ் அணி மூன்று விக்கெட் இழப்பிற்கு 201 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 202 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கில் செயின்ட் லூசியாஸ் கிங்ஸ் அணி விளையாடியது.
இதில் கேப்டன் டுபிளசிஸ் 2 ரன்களிலும், ஜான்சன் சார்லஸ் 12 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க 24 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து செயின்ட் லூசியாஸ் கிங் அணி தடுமாறியது. பின்னர் வந்த இலங்கை அணியின் மனுகா ராஜபக்சா அபாரமாக விளையாடி 35 பந்துகளில் 68 ரன்கள் குவித்தார். இதேபோல் இங்கிலாந்து அணியின் டின் சில்பார்ட் 27 பந்துகளில் 64 ரன், டேவிட் வீஸி 20 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தனர். இதன் மூலம் செயின்ட் லூசியா கிங்ஸ் அணி 17.2 ஓவரில் 5 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.