திருவனந்தபுரம்: கடந்த 24ம் தேதி விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து 643 கண்டெய்னர்களுடன் கொச்சி சென்ற எம்எஸ்சி எல்சா 3 என்ற சரக்கு கப்பல் கொச்சிக்கு அருகே கடலில் மூழ்கியது. இந்தக் கப்பலில் 10க்கும் மேற்பட்ட கண்டெய்னர்களில் கால்சியம் கார்பைடு மற்றும் ஆபத்தான ரசாயனப் பொருட்கள் இருந்தன. இதனால் கண்டெய்னர்கள் கரை ஒதுங்கினால் பொதுமக்கள் யாரும் அதன் அருகே செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டனர். இந்நிலையில் கடந்த சில தினங்களாக கொல்லம், ஆலப்புழா, திருவனந்தபுரம் மற்றும் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கண்டெய்னர்கள் மற்றும் அதிலிருந்த பொருட்கள் கரை ஒதுங்கின. இது அப்பகுதி மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியது.
கப்பல் மூழ்கியதை தொடர்ந்து கப்பலில் இருந்த நூற்றுக்கணக்கான டன் பர்னஸ் ஆயில் உள்பட எரிபொருளும் கடலில் கலந்தது. இதன் மூலம் கடும் சுற்றுச்சூழல் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கப்பல் மூழ்கிய பகுதியில் மீன் பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இதை மாநில பேரிடராக கேரள அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பான உத்தரவு நேற்று பிறப்பிக்கப்பட்டது.
கண்டெய்னரில் திடீர் தீ
கொல்லம் அருகே சக்திக்குளங்கரை கடற்கரையிலும் ஏராளமான கண்டெய்னர்கள் கரை ஒதுங்கின. இவற்றை அப்புறப்படுத்தும் பணி நேற்று நடைபெற்றது. அங்கு குறுகலான சாலையாக இருந்ததால் கண்டெய்னர்களை அறுத்து வாகனங்களில் கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டது. இதன்படி வெல்டிங் எந்திரத்தின் மூலம் ஒரு கண்டெய்னரை அறுக்கும் போது திடீரென தீ பிடித்தது. சிறிது நேரத்தில் தீ கண்டெய்னர் முழுவதும் பற்றி எரிந்தது.