சென்னை: நீட் தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த நெந்லை மாணவர் சூரியநாராயணன், கார்டியாலஜியில் நிபுணராகி ஏழைகளுக்கு சேவை செய்வதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார். நீட் தேர்வு முடிவு நேற்று வெளியானது. இதில் நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையை சேர்ந்த மாணவர் சூரியநாராயணன் 720க்கு 665 மதிப்பெண் எடுத்து தமிழக அளவில் முதலிடம் பிடித்தார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில், ‘எப்போதும் படிப்பு சிந்தனை மட்டுமே உண்டு.
இலக்குடன் பயின்றால் யாரும் தேர்ச்சி பெறலாம். எனக்கு சோர்வு ஏற்படாமல் பெற்றோர், ஆசிரியர்கள் தொடர்ந்து ஊக்கம் அளித்தனர். மாநில சாதனை படைப்பேன் என்று எதிர்பார்க்கவில்லை. இயற்பியல் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. எனினும் இந்த இடம் கிடைத்தது மிகுந்த மகிழ்ச்சி தருகிறது. தொடர்ந்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் பயின்று மருத்துவ உயர்கல்வியை தொடர்ந்து நியூரோ அல்லது கார்டியாலஜி துறையில் மருத்துவ நிபுணராகி ஏழைகளுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே நோக்கமாக உள்ளது’ என்றார்.
மாணவரின் தாயார் சுப்புலெட்சுமி கூறியதாவது: ‘எனது மகன் சூரியநாராயணன் அதிகாலை 2.30 மணி வரை படிப்பான், அதுவரை நானும், அவனது தந்தையும் தூங்காமல் உடனிருந்து ஊக்கப்படுத்துவோம். பள்ளி ஆசிரியர்களும் ஊக்கம் அளித்தனர். ஆர்வமுடன் படித்து நெல்லையப்பர் அருளால் இந்த சாதனை படைத்துள்ளான்’ என்றார்.