மீனம்பாக்கம்: சென்னை விமானநிலையத்துக்கு தேவையான நூறு சதவீத மின்சாரமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக பயன்படுத்தப்பட்டு வருவதால், அங்கு கார்பன் மாசு பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. இதற்காக ஏர்போர்ட் கார்பன் அங்கீகாரம் மற்றும் ஐஎஸ்ஓ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையத்தில் உள்ள சர்வதேச விமான முனையம், உள்நாட்டு விமான முனையம் உள்பட பல்வேறு வளாகங்கள் முழுமையாக இயங்குவதற்கு, ஒவ்வொரு மாதமும் 63.92 லட்சம் யூனிட் மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மின்சாரம் முழுவதும் கடந்த மே மாதம் முதல் பசுமை எரிசக்தியாக, சோலார் மற்றும் காற்றாலை மூலம் கிடைக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் மின்சாரத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வெளிப்பாட்டின் அளவு மிகவும் குறைவாக இருக்கும். முன்னதாக சென்னை விமான நிலையத்துக்குத் தேவையான மின்சாரத்தில், வெளிநிறுவனங்களிடம் இருந்து 59 சதவீதம் சூரிய ஒளி மின்சக்தியாக வாங்கப்படுகிறது. அதோடு, சென்னை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டு உள்ள சூரிய ஒளி மின் உற்பத்தி அலகு மூலம் 3 சதவீத மின்சாரம் கிடைக்கிறது.
இதுதவிர, தமிழ்நாடு மின்வாரியத்தில் இருந்து பசுமை மின்கட்டண திட்டத்தின்கீழ் 38 சதவீத புதுப்பிக்கத்த எரிசக்தி வாங்கப்படுகிறது. இதேபோல், சென்னை விமான நிலையத்தில் பயன்படுத்தப்படும் நூறு சதவீத மின்சாரமும், கார்பன் டை ஆக்சைடு பாதிப்பு இல்லாத, பசுமை எரிசக்தியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், சென்னை விமானநிலைய முனையங்களில் 100 சதவீத எல்இடி விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. இதனால் சென்னை விமான நிலையத்துக்கு தேவையான 100 சதவீத மின்சாரமும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியாக பயன்படுத்தப்படுகிறது.
இதையடுத்து விமான நிலையத்தில் பெருமளவு கார்பன் மாசு குறைக்கப்பட்டு உள்ளது. இதற்காக, சென்னை விமான நிலையத்துக்கு நேற்று ஏசிஏ எனும் ‘ஏர்போர்ட் கார்பன் அங்கீகாரம்’ என்ற சான்றிதழை சர்வதேச விமான நிலைய கவுன்சில், வழங்கியுள்ளது. மேலும், புதுப்பிக்கத்தக்க பசுமை எரிசக்தி மின்சாரத்தைப் பயன்படுத்துவதன் காரணமாக, எரிசக்தி மேலாண்மை அமைப்பின்கீழ் ஐஎஸ்ஓ 500012018 சான்றிதழும் சென்னை விமான நிலையத்துக்கு கிடைத்துள்ளது எனக் குறிப்பிடத்தக்கது.