சென்னை: நடிகை ராதிகா மலையாள சினிமாவில் தனக்கு ஏற்பட்ட ஒரு மோசமான அனுபவம் குறித்து ஒரு மலையாள தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: நான் மலையாளத்தில் மோகன்லால், திலீப் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளேன். எனக்கு ஒரு முறை மோசமான அனுபவம் நடந்தது. ஒரு படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர்கள் உள்பட சிலர் கூட்டமாக இருந்து செல்போனில் எதையோ ஆர்வமுடன் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் அங்கு சென்று பார்த்தபோது கேரவனில் நடிகைகள் உடை மாற்றும் காட்சிகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. அதை பார்த்த நான் அதிர்ச்சியடைந்தேன். அதன்பிறகுதான் கேரவனில் ரகசிய கேமரா வைக்கப்பட்டிருந்தது எனக்கு தெரியவந்தது. பயந்த நான் அதன்பிறகு கேரவனில் உடை மாற்றுவதில்லை. ஓட்டலுக்கு சென்று தான் உடை மாற்றுவேன். அப்போதே நான் அவர்களை கண்டித்தேன். இனி இதுபோல நடந்து கொண்டால் செருப்பை கழற்றி அடிப்பேன் என்று அவர்களிடம் கூறினேன். இவ்வாறு அவர் கூறினார். ராதிகா வெளியிட்டுள்ள இந்த திடுக்கிடும் தகவல் மலையாள பட உலகில் அடுத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
* இவ்வளவு நாள் மறைத்தது ஏன்?
ராதிகாவின் கருத்து குறித்து மலையாள டப்பிங் கலைஞர் பாக்கியலட்சுமி கூறுகையில், ‘‘கேரவனில் ரகசிய கேமரா வைத்து நடிகைகள் உடைமாற்றும் காட்சிகளை சிலர் பார்த்ததாக இப்போதுதான் ராதிகா கூறியுள்ளார். இவ்வளவு நாள் அதை மூடி மறைத்தது ஏன்? இதன் மூலம் குற்ற செயல்கள் தொடர்ந்து நடைபெற அவர் உதவி புரிந்துள்ளார் என்றே கருதவேண்டும்’’ என தெரிவித்துள்ளார்.
* நான் எங்கும் ஓடி ஒளியல.. – மனம் திறந்தார் மோகன்லால்
சென்னை: ஹேமா கமிட்டி அறிக்கை மற்றும் மலையாள நடிகைகளின் பாலியல் புகார்கள் குறித்து கருத்து தெரிவிக்காமல் இருந்த நடிகர் மோகன்லால் நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது: ஹேமா கமிட்டி அறிக்கை குறித்து மலையாள நடிகர்கள் சங்கம் மட்டுமே பதில் சொல்ல வேண்டும் என்று நினைப்பது தவறாகும். நடிகர்கள் சங்கத்தை மட்டுமே அனைவரும் குற்றம் சொல்கின்றனர். தயவுசெய்து மலையாள சினிமாவை அழித்துவிட வேண்டாம். நான் எங்கும் ஓடி ஒளியவில்லை. எனது மனைவியின் அறுவை சிகிச்சை, நான் டைரக்ட் செய்யும் படத்திற்கான பணிகள் ஆகிய காரணங்களால் குஜராத், மும்பை, சென்னை ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டியிருந்தது. அதனால்தான் விளக்கம் அளிக்க சற்று தாமதமானது. இவ்வாறு கூறினார்.