கேரளா: கேரவன் விவகாரம் தொடர்பாக நடிகை ராதிகா சரத்குமாரை தொடர்புகொள்ளவில்லை என கேரள சிறப்பு புலனாய்வுக் குழு விளக்கம் அளித்துள்ளது. மலையாள திரையுலகில் நடிகைகள் பாலியல் தொல்லைக்கு ஆளாவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இதுகுறித்து விசாரிப்பதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி ஹேமா தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த கமிட்டியின் அறிக்கையை கேரள அரசு கடந்த வாரம் வெளியிட்டது. அதில், நடிகைகளுக்கும், பெண் கலைஞர்களுக்கும் பாலியல் தொல்லை இருப்பதாகவும் இதனை தொடர்ந்து நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களுக்கு எதிராக பாலியல் புகார்கள் எழுந்துள்ளது.
இந்த நிலையில், கேரள அரசால் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு தொலைபேசி வாயிலாக நடிகை ராதிகாவிடம் விசாரணை நடத்தியதாக வந்த தகவல் வெளியான நிலையில், பாலியல் தொல்லை மற்றும் பாலியல் சீண்டல் தொடர்பாக அமைக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு தற்போது விளக்கமளித்துள்ளது. நடிகை ராதிகாவை விசாரணைக்காக தொடர்பு கொள்ளவில்லை என விளக்கம் அளித்துள்ளது. ராதிகா முன்வைத்த குற்றசாட்டுகள் தொடர்பாக அவர் புகார் அளிக்கப்போவதில்லை என்பதால் அவரிடம் வாக்குமூலத்தை பெற போவதில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு விளக்கமளித்துள்ளது. இன்று காலை முதல் கேரள அரசால் நியமிக்கப்பட்ட சிறப்பு புலனாய்வு குழு ராதிகாவை அழைத்து அவரிடம் பேசியதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் சிறப்பு புலனாய்வு குழு நடிகை ராதிகாவை அழைத்து பேசவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.