ஆலந்தூர்: கிண்டி மடுவின்கரை மேம்பாலத்தில் நேற்று நடந்த கார் விபத்தில் சிக்கி தப்பித்த போலீஸ் ஏட்டு இன்று காலை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்தில் தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவத்தால் சென்னையில் பரபரப்பு நிலவி வருகிறது. சென்னை தரமணி காவல்நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் செந்தில் (48). இவர் பரங்கிமலையில் உள்ள காவலர் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்துவந்தார். இவர் நேற்று சாதாரண உடையில் கிண்டி மடுவின்கரை மேம்பாலம் மீது காரில் சென்றுள்ளார்.
அப்போது முன்னால் சென்றுக்கொண்டிருந்த ஒரு பைக் மீது அவரது கார் மோதியதில் அந்த பைக் மேம்பாலத்தில் இருந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் அந்த பைக்கை ஓட்டிவந்த சென்னை ஈக்காடுதாங்கல் பகுதியை சேர்ந்த முருகேசன் (55) என்பவர் படுகாயம் அடைந்தார். இந்த விபத்து பார்த்ததும் பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் ஓடிவந்தனர். பின்னர் காயம் அடைந்தவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்துக்கு காரணமான காரை ஓட்டிவந்த ஏட்டு செந்திலை பொதுமக்கள் சுற்றிவளைத்து பிடித்து வைத்திருந்தனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் உடனடியாக கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வந்து பொதுமக்கள் பிடியில் இருந்த ஏட்டு செந்திலை மீட்டு காவல்நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்து உள்ளனர். அப்போது அவர் குடிபோதையில் இருந்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து அவரிடம் விசாரணை நடத்திவிட்டு வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரிகிறது.
இந்தநிலையில், இன்று காலை தரமணி ரயில் நிலையம் அருகே உள்ள காலி மைதானத்துக்கு ஏட்டு செந்தில் வந்துள்ளார். பின்னர் அவர் திடீரென தான் கொண்டுவந்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீ வைத்துக்கொண்டார். உடல் கருகிய அவர் கதறியதால் அக்கம்பக்கத்தினர் வந்து பார்த்துள்ளனர். இதுபற்றி தகவல் கிடைத்ததும் தரமணி போலீசார் சென்று அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்வதற்குள் ஏட்டு செந்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து உடலை பிரேத பரிசோதனைக்கு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.