தண்டராம்பட்டு: மதுப்பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த சென்ற 2 பேர், மரத்தில் கார் மோதியதில் உயிரிழந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த காட்டாம்பூண்டி கிராமத்தில் உள்ள மது அடிமைகள் மறுவாழ்வு மையத்தில், வேட்டவலத்தை சேர்ந்த ராம்கி(30), திருவண்ணாமலையை சேர்ந்த திருப்பதி(40), நவாஸ்(40), தண்டராம்பட்டை சேர்ந்த கணேசபெருமாள்(35), பள்ளிகொண்டாப்பட்டு சமீத்(42) உள்பட 16 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் மூலம் கிராமம் கிராமாக சென்று மதுவால் ஏற்பாடும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சேத்துப்பட்டில் நேற்று நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ராம்கி, திருப்பதி, நவாஸ், கணேசபெருமாள், சமீத் ஆகிய 5 பேர் சென்றுவிட்டு நள்ளிரவு 5 பேரும் காரில் மறுவாழ்வு மையத்திற்கு திரும்பி கொண்டிருந்தர். காரை ராம்கி ஓட்டியுள்ளார். நேற்று அதிகாலை 3 மணியளவில் கச்சிராப்பட்டுக்கு வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையோர மரத்தில் மோதியது. இதில் கார் ெநாறுங்கி ராம்கி, திருப்பதி ஆகியோர் உயிரிழந்தனர். மற்ற மூவரும் படுகாயத்துடன் திருவண்ணாமலை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.