சென்னை: சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே குடிபோதையில் மின்னல் வேகத்தில் கார் ஓட்டி வந்து சோதனை தடுப்புகளை உடைத்துக் கொண்டு போலீசாரின் ரோந்து வாகனம் மீது மோதியவர் கைது செய்யப்பட்டார்.
சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று இரவு போலீசார் சாலையின் இடையே தடுப்புகள் அமைத்து வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். நள்ளிரவு 12.30 மணி அளவில் மின்னல் வேகத்தில் வந்த காரை போலீசார் நிறுத்த முயன்றனர். அப்போது காரை ஓட்டி வந்த வாலிபர், போலீசாரிடம் இருந்து தப்பித்து செல்ல முயன்றார். சாலையில் வைக்கப்பட்டிருந்த சோதனை தடுப்புகளை இடித்து தள்ளிவிட்டு சென்ற போது, சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த போலீஸ் ரோந்து வாகனத்தின்மீது மோதி விபத்துக்குள்ளானது.
இதில் காரை ஓட்டி வந்த வாலிபருக்கு மூக்கு உள்ளிட்ட இடங்களில் காயம் ஏற்பட்டு ரத்தம் கொட்டியது. அவர் அதிகளவில் மது குடித்து இருந்தது தெரியவந்தது. பின்னர் போலீசார் அளித்த புகாரின் படி பண்டிபஜார் போக்குவரத்து போலீசார் வந்து, மது போதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய வாலிபரிடம் விசாரணை நடத்தினர். அதில் அவர் ராயப்பேட்டையை சேர்ந்த ரியாஸ் அகமது (28) என்றும், இவர் நேற்று இரவு நண்பர்கள் அளித்த மதுவிருந்தில் கலந்து கொண்டு மது குடித்துவிட்டு வந்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் குடிபோதையில் வாகனம் ஓட்டியது, அதிவேகமாக வாகனம் ஓட்டியது, சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியது உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து ரியாஸ் அகமதுவை கைது செய்தனர். மேலும், அவர் ஓட்டி வந்த காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.