பெங்களூரு: பெங்களூரு குடியிருப்பு வளாகத்தில் இந்தியில் பேசாததால் கார் ‘பார்க்கிங்’ மறுக்கப்பட்டதாக கூகுள் நிறுவன பணியாளர் ஆவேசமாக பதிவிட்டுள்ளார். கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் செயல்பட்டு வரும் கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்ப பணியாளர் அஜய் மேத்தா என்பவரின் குடியிருப்பு வளாகத்தில் பணியாற்றும் பாதுகாவலர்கள் இந்தி மொழியில் பேசியதால், அவர்களுடன் அவரால் ஆங்கிலத்தில் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும் அவரது குடியிருப்பு வளாகத்தில் கார் பார்க்கிங் வசதி இருந்தும், அவர் இந்தி மொழியில் பேசாததால் அவருக்கு பார்க்கிங்கில் இடம் மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் ஆவேசமடைந்த அஜய் மேத்தா, ‘இந்தியாவில் ஆங்கிலத்தை கட்டாய மொழியாக்கினால் இதுபோன்ற பிரச்னைகள் தவிர்க்கப்படும்’ என்று சமூக வலைதளத்தில் தனது கோபத்தை வெளிப்படுத்தி உள்ளார்.
இவரது இந்தப் பதிவு சமூக வலைதளத்தில் வைரலானதைத் தொடர்ந்து, பலரும் அவரது கருத்துக்கு ஆதரவையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர். ஆங்கிலத்தை கட்டாய மொழியாக்குவது, இந்தியாவின் பன்மொழி பண்பாட்டை அழிக்கும் என்று அவரது கருத்தை எதிர்ப்பவர்கள் கூறுகின்றனர். அதே நேரத்தில், ஆங்கிலம் தொடர்பு மற்றும் வேலைவாய்ப்புகளை மேம்படுத்தும் என்று கருத்து கூறுகின்றனர். கர்நாடக மாநிலத்தில் கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று உள்ளூர் மக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், இந்த சம்பவம் மொழி அரசியலை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
இதற்கு முன்பும், பெங்களூருவில் வெளிமாநில ஊழியர்கள் மொழி அடிப்படையில் பாகுபாட்டை எதிர்கொண்டதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்த விவகாரம், இந்தியாவில் இந்தி திணிப்பு குறித்த விவாதத்தை மீண்டும் முன்னிலைப்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் நடந்த சம்பவம், சமூக ஊடகங்களிலும் அரசியல் ரீதியாகவும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.