திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மீது கார் மோதிய விபத்தில் வாகனத்தில் தீ பற்றியதால் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் உயிர் தப்பினர். திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் இருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட மாணவர்களை ஏற்றி கொண்டு வேன் ஒன்று முக்கரம்பாக்கம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்தது. ஊத்துக்கோட்டை சாலை வழியே சென்ற பள்ளி வேன் பெரியபாளையம் கோவில் நின்ற போது அதே திசையில் பின்னால் அதிவேகமாக வந்த கார் ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் மீது பயங்கரமாக மோதி விபத்து ஏற்பட்டது.
அப்போது வேன் குலுங்கியதில் பள்ளி மாணவர்கள் முன்னால் உள்ள சீட்டிலும், கம்பியிலும் மோதி லேசான காயமடைந்தனர். இந்த விபத்தில் காரில் இருந்து புகை வந்ததை கண்ட கார் ஓட்டுநர் உடனடியாக காரில் இருந்து இறங்கினார். அப்போது காரின் முன் பகுதியில் தீப்பற்றி வேனிற்கும் தீ பரவியது. இதனையடுத்து வேனில் இருந்த பள்ளி மாணவர்கள் அனைவரும் அலறியடித்தபடி வேனில் இருந்து இறங்கி பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டு அருகில் இருந்த அரசு பள்ளி வளாகத்திற்குள் அழைத்து செல்லப்பட்டனர். கார், வேன் தீப்பற்றியதை கண்ட அப்பகுதி மக்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் துரிதமாக செயல்பட்டு தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் காயமடைந்து அதிர்ச்சியில் உறைந்த மாணவர்களுக்கு ஆசிரியர்களும், பொதுமக்களும் ஐஸ் கட்டி மூலம் ஒத்தடம் கொடுத்தது, அவர்களை அசுவாசப்படுத்தினர். அதிவேகமாக வந்த கார் மோதி பள்ளி வேன் தீப்பற்றிய நிலையில் அதிர்ஷ்டவசமாக பள்ளி மாணவர்கள் சுதாரித்து உடனடியாக இறங்கியதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து குறித்து பெரியபாளையம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி மாணவர்களை ஏற்றி சென்ற வேன் விபத்தில் சிக்கி தீப்பற்றிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.