கரூர்: ஈரோடு சூளை பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார்(40). தனியார் கம்பெனி சூபர்வைசர். மனைவி மோகனா(40), மகன் சுதர்சன் (15), மகள் வருணா (10), மாமியார் இந்திராணி(67) ஆகியோருடன் கடந்த 20ம்தேதி மாலை காரில் திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு சாமி கும்பிட சென்றுள்ளார். பின்னர் நேற்றுமுன்தினம் இரவு ஈரோடுக்கு புறப்பட்டனர். காரை கிருஷ்ணகுமார் ஓட்டினார். நேற்று அதிகாலை 3.30 மணியளவில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி ஆண்டிப்பட்டி கோட்டை அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில் பயங்கரமாக மோதியது. இதில் கிருஷ்ணகுமார், வருணா, இந்திராணி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மோகனா, சுதர்சன் ஆகியோர் படுகாயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
தந்தை, மகன் பலி: திருவண்ணாமலை மாவட்டம், போளூரை சேர்ந்தவர் குப்பன்(65). ஓய்வு பெற்ற ஆசிரியர். இவரது மகன் பாலசுப்ரமணி(45). பாமக மாநில இளைஞரணி அமைப்பாளர். இருவரும் நேற்று சொந்த ஊரான கொரால்பாக்கம் கிராமத்திற்கு சென்றுவிட்டு பைக்கில் திரும்பி கொண்டிருந்தனர். போளூர் பைபாஸ் சாலையில், ஆந்திராவை சேர்ந்தவர்களது காரை முந்தி செல்ல பாலசுப்பிரமணி முயன்றபோது, பைக் மீது கார் மோதி இருவரும் கீழே விழுந்து பலியாகினர். பின்னால் வந்த திருவண்ணாமலை தாலுகா, ராமாபுரத்தை சேர்ந்த சேட்டு(49), மாதவன்(45) ஆகியோரது பைக்கும் கார் மீது ேமாதியதில் இருவரும் காயம் அடைந்தனர்.