பாடாலூர்: பெரம்பலூர் அருகே இன்று காலை மரத்தில் கார் மோதியதில் மருமகன், மாமனார், குழந்தை பலியாகினர். பெண் டாக்டர் படுகாயமடைந்தார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் தாலுகா சூரங்குடி தெற்கு கிரிவளை கிராமத்தை சேர்ந்த அன்புச்செல்வன் மகன் பாலபிரபு (28). இவரது மனைவி கவுரி (27). சித்தா டாக்டர். சென்னை தாம்பரத்தில் கிளினிக் வைத்துள்ளார். இவர்களது மகள் கவிகா (2). கவுரியின் தந்தை, திருப்பூர் மாவட்டம் பல்லடம் தாலுகா இச்சிப்பட்டி அடுத்த பூசாரி தோட்டத்தை சேர்ந்த கந்தசாமி (50). பாலபிரபு, குடும்பத்துடன் தாம்பரம் பகுதியில் வசித்து வருகிறார். பாலபிரபுவும், கவுரியும் காதல் திருமணம் செய்தவர்கள்.
பாலபிரபு, மனைவி, குழந்தை மற்றும் மாமனாருடன் கோயில் திருவிழாவிற்காக சொந்த ஊரான கன்னியாகுமரிக்கு சென்றிருந்தார். நேற்றிரவு சென்னைக்கு குடும்பத்துடன் காரில் புறப்பட்டனர். பாலபிரபு, காரை ஓட்டினார். இன்று காலை 7.30 மணியளவில் பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அடுத்த பெருமாள் பாளையம் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக சென்று சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதியது.
இதில் காரின் முன்பகுதி நொறுங்கியது. இடிபாட்டுக்குள் சிக்கி கவிகா, பாலபிரபு, அவரது மாமனார் கந்தசாமி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். கவுரி படுகாயமடைந்தார். தகவலறிந்து பாடாலூர் போலீசார் விரைந்து வந்து, 3 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காகவும், கவுரியை சிகிச்சைக்காகவும் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் வழக்கு பதிந்து விபத்துக்கான காரணம் பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.