கள்ளக்குறிச்சி: புதுவை லாஸ்பேட்டை கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்த கிருஸ்துவராஜ் மகன் நெல்சன் உள்பட 5 பேர் நேற்று காரில் சேலம் மாவட்டம் ஏற்காடு சென்று கொண்டிருந்தனர். கள்ளக்குறிச்சி புறவழிச்சாலை அண்ணா நகர் மேம்பாலம் அருகே காலை 7 மணியளவில் செல்லும்போது காரின் பின் சக்கரம் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.
கட்டுப்பாட்டை இழந்த கார் சற்று நேரத்தில் சாலையின் நடுவே தடுப்புக்கட்டையின் மீது மோதி நின்றது. அதற்குள் தீ மளமளவென பரவி கார் முழுவதும் பற்றி எரிந்தது. இதையடுத்து காரில் இருந்த 5 பேரும் கீழே இறங்கி தப்பித்தனர். தகவலறிந்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர். எனினும் கார் முழுவதுமாக எரிந்து சேதமானது. இதுகுறித்து கள்ளக்குறிச்சி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.