*4 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டன
நெல்லை : கார் பருவ நெல் சாகுபடியை கருத்தில் கொண்டு நெல்லைக்கு ரயிலில் நேற்று 1304.8 மெ.டன் உரம் வந்திறங்கியது. இவற்றை வேளாண் அதிகாரிகள் 4 மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பி வைத்தனர்.நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்கனவே கார் சாகுபடி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. விவசாயிகள் தேவையை கருத்தில் கொண்டு கார் சாகுபடிக்காக நேற்று பாபநாசம் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
நெல்லை மாவட்டத்தில் ஏற்கனவே 3636 மெடன் யூரியா, 1194 மெடன் டிஎபி. 1599 மெ.டன் பொட்டாஷ், 4042 மெ.டன் காம்ப்ளக்ஸ் மற்றும் சூப்பர் பாஸ்பேட் 700 மெ.டன் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு தனியார் மற்றும் கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் உரங்கள் வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சாகுபடி பணிகள் தீவிரமடைந்து வரும் நிலையில், விவசாயிகளின் கூடுதல் தேவைக்காக 1304.8 மெ.டன் உரம் தூத்துக்குடியில் இருந்து கங்கை கொண்டான் ரயில் நிலையம் வந்து சேர்ந்தது.
இதில் நெல்லை மாவட்டத்திற்கு யூரியா 222.75 மெ.டன், டிஏபி 114 மெ.டன். காம்ப்ளக்ஸ் 130.5 மெ.டன், சூப்பர்பாஸ்பேட் 38.6 மெ.டன். தென்காசி மாவட்டத்திற்கு யூரியா 186.50 மெ.டன், டிஏபி 85, காம்ப்ளக்ஸ் 91.50, சூப்பர்பாஸ்பேட் 16 மெ.டன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு யூரியா 139.95, டிஏபி 77, காம்ப்ளக்ஸ் 57, சூப்பர்பாஸ்பேட் 7 மெட்ரிக் டன், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு யூரியா 73.80, டிஏபி43, காம்ப்ளக்ஸ் 40, சூப்பர்பாஸ்பேட் 2 மெ.டன் உரம் என தனித்தனியே பிரிக்கப்பட்டு, அனுப்பி வைக்கப்பட்டன.
உரங்களை மாவட்டங்கள் தோறும் அனுப்பும் பணியினை ஸ்பிக் உர நிறுவன அலுவலர் செந்தில்குமார் மற்றும் நெல்லை மாவட்ட தரக்கட்டுப்பாடு வேளாண்மை உதவி இயக்குநர் சந்திரபோஸ் ஆகியோர் மேற்கொண்டனர். நெல்லை மாவட்டத்திற்கு வந்த உரங்கள் அனைத்துமே, மாவட்ட தனியார் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பப்பட உள்ளது.
விவசாயிகள் தேவைக்கு அதிகமாக ரசாயன உரங்கள் பயன்படுத்துவதை குறைத்திடவும், விற்பனையாளர்கள் ஆதார் அட்டை அடிப்படையில் விவசாயிகளின் பயிர் தேவைக்கு மட்டுமே சாகுபடி நிலப்பரப்பிற்கு தகுந்தவாறு உரங்களை விற்பனை செய்திடவும். அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மட்டுமே உரங்களை விற்பனை செய்திடவும் வேளாண்மை இணை இயக்குநர் வெங்கடேசன் கேட்டுக் கொண்டுள்ளார்.