ஈரோடு, நவ. 9: ஈரோடு சூரம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பாலாஜி (35). பாத்திர வியாபாரி. இவர், நேற்று அவரது உறவினர்களை திருச்சி மாவட்டத்திற்கு ரயில் மூலம் அனுப்பி வைக்க அவர்களை பாலாஜி காரில் ஈரோடு ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தார். பின்னர், காரில் இருந்து இறங்கி உறவினர்களை ரயில்வே ஸ்டேஷனுக்குள் அனுப்பி வைத்துவிட்டு, காரை திரும்ப எடுக்க வந்தார். அப்போது, காரின் முன்பகுதியில் இருந்து கரும் புகையுடன் தீ பிடித்து எரிய துவங்கியது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த ஈரோடு தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இதில், காரின் முன்புற பகுதி தீயில் எரிந்து நாசமானது. இந்த தீ விபத்து கார் பேட்டரியில் ஏற்பட்ட கசிவின் காரணமாக ஏற்பட்டிருக்கலாம் என தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.