பெரம்பூர்: சென்னை கொடுங்கையூர் அம்பேத்கர் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (38). இவர் கார் டிரைவர். மனைவி உமாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த ஒருவருடமாக பிரிந்து வாழ்கிறார். இதனால் அவருடன் தாய் கீதா வசித்து வருகின்றார். நேற்றிரவு 10 மணியளவில் ராஜ்குமார் வீட்டுக்கு நண்பர்கள் டில்லி, பெருமாள் ஆகியோர் வந்து அழைத்துள்ளனர். அவர்கள் குடிபோதையில் இருந்ததால் வெளியே வர தயக்கம் காட்டியுள்ளார்.
இருப்பினும் அவர்கள் தொடர்ந்து அழைத்ததால் ராஜ்குமார் வெளியே வந்துள்ளார். அப்போது டில்லி, தான் வைத்திருந்த கத்தியால் ராஜ்குமாரை சரமாரியாக வெட்டியதில் தலை, கழுத்து, முகம் ஆகிய பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தவெள்ளத்தில் ராஜ்குமார் விழுந்தார். உடனடியாக அவரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்து ஆபத்தான நிலையில் உள்ள அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இதுதொடர்பாக கொடுங்கையூர் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி இன்று காலை டில்லிபாபு, பெருமாள் ஆகியோரை கைது செய்தனர். சில நாட்களுக்கு முன்பு டில்லி, பெருமாள் மற்றும் ராஜ்குமார் ஆகியோர் மது அருந்தும்போது, ‘’ உங்களை கொலை செய்து விடுவேன்’’ என்று ராஜ்குமார் மிரட்டியதாக தெரிகிறது. இதை மனதில் வைத்துக்கொண்டு ராஜ்குமாரை தீர்த்துக்கட்ட முடிவு செய்து வெட்டியுள்ளனர். இவ்வாறு தெரியவந்துள்ளது. இதையடுத்து டில்லி, பெருமாள் ஆகியோரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.