மாமல்லபுரம்,: மாமல்லபுரம் அருகே நடுக்கடலில் விரித்து வைத்திருந்த மீன்பிடி வலைகளை சேதப்படுத்திய காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்கள் மற்றும் அவர்கள் வந்த லாஞ்சர் மற்றும் படகுகள் சிறைபிடிக்கப்பட்டது. இதுகுறித்து இருதரப்பு மீனவர்களும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். மாமல்லபுரம் அருகே மீனவர் குப்பத்தை சேர்ந்த மீனவர்கள் நாள்தோறும் 50க்கும் மேற்பட்ட சிறிய ரக படகில் நடுக்கடலுக்கு சென்று, வலைகளை விரித்து மீன்பிடித்து வந்து விற்பனை செய்வது வழக்கம். மேலும், கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் நடுக்கடலில் விரித்து வைத்திருக்கும் மீன்பிடி வலைகள் காணாமல் போவதை கண்டு மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர். இதனால் அப்பகுதி மீனவர்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று விடுமுறை என்பதால் மதியம் கடலுக்குள் மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் சிறிய படகுகளில் சென்று மீன்பிடி வலைகளை விரித்து வைத்திருந்தனர். பின்னர் மாலை 6 மணியளவில் கடலுக்கு சென்று மீனவர்கள் பார்த்தபோது, அங்கு பெரிய லாஞ்சரில் வந்த ஒரு கும்பல், மாமல்லபுரம் பகுதி மீனவர்களின் வலைகளை அறுத்து, அதில் இருந்த மீன்களை திருடிக்கொண்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து, மாமல்லபுரம் மீனவர் பகுதிகளை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மீனவர்கள் படகில் நடுக்கடலுக்கு சென்று, அங்கிருந்த லாஞ்சர் தப்பி செல்லாதபடிசுற்றி வளைத்து, கடலில் நங்கூரமிட்டு சிறைபிடித்தனர்.
பின்னர் லாஞ்சரில் இருந்து காரைக்காலை சேர்ந்த 14 மீனவர்களைப் பிடித்து, தங்களின் படகு மூலம் கரைக்கு கொண்டு வந்தனர். இதுகுறித்து காரைக்காலை சேர்ந்த மீனவர் சங்க முக்கிய பிரமுகர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் விரைந்து வந்து, எங்கள் தரப்பினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, சேதப்படுத்திய மீன்பிடி வலைகளுக்கு உரிய இழப்பீடு கொடுத்தால் மட்டுமே, காரைக்காலை சேர்ந்த மீனவர்களின் லாஞ்சரையும் படகுகளையும் விடுவிப்போம் என மாமல்லபுரம் பகுதி மீனவர்கள் வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.