Wednesday, April 17, 2024
Home » கேப்டன் மகனுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத மாஜி மந்திரி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

கேப்டன் மகனுக்கு ஒத்துழைப்பு கொடுக்காத மாஜி மந்திரி பற்றி சொல்கிறார் wiki யானந்தா

by Mahaprabhu

‘‘வேட்பாளர் யாருன்னே தெரியாம மனுதாக்கலுக்கு போன இலைக்கட்சி தொண்டர்கள் புலம்புறாங்களாமே…’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘வெயிலூர் மக்களவை தொகுதியில இலைக்கட்சியில வேட்பாளாரா ஒரு கவர்மென்ட் டாக்டர் விருப்ப ஓய்வு ெபற்றுவிட்டு வந்து நிற்குறாராம்.. இவரு உள்ளூர்லயே கிளினிக் வெச்சும் பார்த்து வந்தாராம்.. வேட்பாளர் யாருமே கிடைக்காததால, இலைக்கட்சியில திடீர்னு இவரை வேட்பாளராக அறிவிச்சுட்டாங்களாம்.. ஆனா கட்சியில் உள்ள பெரும்பாலானோருக்கு அவரு, யாருன்னே தெரியலையாம்.. மனுதாக்கல் செய்ய நேத்து ஊர்வலமாக போயிருக்காங்க.. அப்போது, அடிமட்ட தொண்டர்களுக்கு யார் வேட்பாளர், இவர் எப்ப நம்ம கட்சிக்கு வந்தாரு, எந்த விவரமும் தெரியவே இல்லையே, எந்த போராட்டத்துலயும், ஆர்ப்பாட்டத்துலயும் பங்கேற்ற மாதிரி முகம் தெரியலையே.. இப்படி இருந்தா கட்சி எப்படி வெற்றி பெறும்னு, மனுதாக்கல் ஊர்வலத்துல ரத்தத்தின் ரத்தங்களே கவலை தோய்ந்த முகத்துடன் பேசிக்கிட்டாங்களாம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கூட்டணிக்கு தொகுதி ஒதுக்கீடால் சேலம்காரர் மீது நெற்களஞ்சிய தொண்டர்கள் அதிருப்தியில் இருப்பதாக சொல்கிறார்களே.. ’’

‘‘ கோயம்பேடு கட்சியுடன் இலை கட்சி கூட்டணி முடிவானதும் நெற்களஞ்சிய மக்களவை தொகுதி கோயம்பேடு கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இதனால் கீழ்மட்ட தொண்டர்கள் முதல் நிர்வாகிகள் வரை சேலம்காரர் மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர். இலை கட்சியில் தோல்வி பயம் காரணமாக முக்கிய நிர்வாகிகள் போட்டியிட தயக்கம் காட்டியதே கூட்டணி கட்சிக்கு ஒதுக்கப்பட்டதற்கான காரணமாம்…. கடந்த 10 ஆண்டுக்கு முன் நெற்களஞ்சிய தொகுதியில் இலை கட்சி சார்பில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்த கடைசி எழுத்தில் முடியக்கூடிய ராமன் என்பவர் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதனால் இந்த முறை இலை கட்சி களமிறங்கும் என்று என எதிர்பார்த்து இருந்தனர். ஆனால்… கடைசியில் கூட்டணி கட்சிக்கு தொகுதி கொடுக்கப்பட்டதால் இப்படி ஆகி விட்டதே என தொண்டர்கள் புலம்புகின்றனர். இதனால் இந்த முறையும் திமுகவே வெற்றி பெறும் என்று இலை கட்சியினரே பேச தொடங்கி விட்டார்களாம்’’ என்றார் விக்கியானந்தா.

‘‘கேப்டன் மகனுக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருக்கிறார்களாமே..’’ என்று கேட்டார் பீட்டர் மாமா.

‘‘இலைக்கட்சி தரப்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் முன்னாள் அமைச்சர்கள் உட்பட சிலர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் ஒரு சிலருக்கு 2 தொகுதிகள் வரை தரப்பட்டுள்ளன. இலை தரப்பில் தூங்கா நகர உதயமான மாஜி அமைச்சர் கடலோர மாவட்டம் உள்ளிட்ட இரு மாவட்டத்திற்கு பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் மெடல் மாவட்ட முரசு கட்சியினர் மிகுந்த அப்செட்டில் உள்ளனர். காரணம், கேப்டன் மகன் இந்த தொகுதியில் போட்டியிடும் நிலையில், மெடல் மாவட்ட தொகுதிக்குள் வரும் தூங்கா நகரத்து 2 தொகுதிகளின் எம்எல்ஏக்களும் தங்களுக்கு வேலை பார்ப்பார்கள் என அக்கட்சியினர் நினைத்திருந்தனர். ஆனால், மாஜி அமைச்சரோ தனக்கு ஒதுக்கப்பட்ட தொகுதியில்தான் பணியாற்றுவேன். மற்றொரு எம்எல்ஏவும் தன்னுடன்தான் பணியாற்றுவார் என ஸ்ட்ரிக்ட் ஆக சொல்லி விட்டாராம். இதனால் மெடல் மாவட்ட முரசு கட்சியினர், முழு அப்செட்டில் உள்ளனர். அதேநேரம் தங்களுக்கு பொறுப்பாளராக உள்ள இலைக்கட்சி மாஜி பால்வளத்திடம் தங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கூறி வருகின்றனராம்…’’ என்றார் விக்கியானந்தா.

‘‘மாம்பழ வேட்பாளருக்கு விபூதி அடிச்சாங்களாமே.. அதென்ன கதை..’’ என சிரித்தபடி கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மாங்கனி தொகுதியில் தாமரைக்கட்சி கூட்டணி வேட்பாளராக மாம்பழ கட்சிக்காரர் களமிறங்கியிருக்காரு. இவரை சந்திக்க மாம்பழ கட்சி எம்எல்ஏ ஆபீசுக்கு இந்து மக்கள் கட்சி தலைவரு வந்திருக்காரு. வில்லுக்கு பெயர் போன பெயரை கொண்ட அவரு ஒன்னும் சும்மா வரலிங்கோ… கையில் செங்கோலை எடுத்து வந்து, மாம்பழ வேட்பாளர் கையில் கொடுத்து, கற்பூரம் ஏற்றி வழிபாடே நடத்தினாராம். அப்போது திடீரென மந்திரம் ஓதுவது போல், அவரு வெற்றி பெறுவாராக, இவரு வெற்றி பெறுவாராக, கூட்டணி வெற்றி பெறுக… என ஓதி 10 நிமிஷம் எல்லோரையும் கதிகலங்க வைச்சிட்டாராம். கடைசியில வேட்பாளருக்கு விபூதி அடிச்சி விட்டதுதான் மெகா கிளைமாக்சாம். கூட இருந்த மக்கள் பிரதிநிதிக்கும் விபூதி அடிச்சிவிட்டு, எல்லாம் நல்லபடியாக நடக்குமுனு ஆருடம் சொல்லிட்டு, கொடுத்த செங்கோலை கையில் வாங்கிக்கொண்டு புறப்பட்டாராம். இதையெல்லாம் சுற்றியிருந்து வேடிக்கை பார்த்த மாம்பழ கட்சிக்காரங்க, நாமலே வேட்பாளரை தேடி பிடிச்சு நிறுத்தியிருக்கோம், இவரு இஷ்டத்திற்கு விபூதி அடிச்சி காலி பண்ணிருவாரு போல இருக்கேனு பேசிக்கிட்டாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘பவர்புல் உதவியாளரின் தர்பார் தாங்கலையாமே..’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘கோவை வடக்கு மாவட்ட டாஸ்மாக் மேலாளர் அலுவலகத்தில் உதவியாளர் ஒருவர் பவுர்புல்லா இருக்கிறாராம். அதிமுக ஆட்சி காலத்தில் இருந்தே இவர்தான் இந்த ஆபீசுல முடிவு செய்யற அதிகார மையமாக இருந்துட்டு வர்றாராம். மேலாளர், குடோன் அதிகாரிகள் என எல்லோரும் இவரது கட்டுப்பாட்டில்தான் இருக்காங்களாம். எந்த கடைக்கு எந்த பிராண்ட் சரக்கு போகணும், எந்த பிராண்ட்டுக்கு எவ்வளவு கமிஷன் தரணும் என எல்லாமே இவர்தான் முடிவு செய்யுவாராம். உயரதிகாரிகள் எந்த விவகாரம் என்றாலும் இவரை நோக்கி கை காட்டி விடுவாங்களாம். ‘அய்யா’ பாத்துக்குவாரு என இவரை அதிகாரிகள் நம்புறாங்களாம். ஊழியர்கள், சூப்பர்வைசர்கள் டிரான்ஸ்பரும் இவர்தான் செய்து தர்றாராம்… இவரது கட்டுப்பாட்டில் ஏகப்பட்ட ‘’பார்’’கள் இருக்கிறதாம். தேர்தல் நேரத்தில் அதிமுக குரூப்புகளுக்கு கடைகளில் இருந்து இல்லீகல் லிக்கர் சப்ளை செய்யுராறாம். பறக்கும் படைக்கு தெரியாம, மதுபாட்களை டெலிவரி செய்வதில் இவர் கில்லாடியாம். அதிமுகவினர் இந்த உதவியாளரைத்தான் மலைபோல் நம்புகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

You may also like

Leave a Comment

nine + 5 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi