புதுடெல்லி: கடனாக வாங்கப்படும் மொத்த தொகையும் மூலதன செலவினங்களுக்கு நிதியளிப்பதற்காக அரசு பயன்படுத்துவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். மக்களவையில் 2025-2026ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் குறித்த விவாதத்திற்கு பதிலளித்து பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிச்சயமற்ற தன்மைகள், உலகளாவிய பொருளாதார சூழலில் ஏற்படும் மாற்றங்கள், தேக்கமடைந்த உலகளாவிய வளர்ச்சி மற்றும் பணவீக்கம் ஆகியவற்றின் காலகட்டத்தில் பட்ஜெட் வந்துள்ளது. பட்ஜெட் தயாரிப்பது முன்பைவிட இப்போது மிகவும் சவாலானது. 2026ம் நிதியாண்டில் பயனுள்ள மூலதன செலவு ₹15.48லட்சம் கோடியாகும். இது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.3சதவீதமாகும்.
அடுத்த நிதியாண்டில் நிதிப் பற்றாக்குறை இலக்கு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.4 சதவீதமாகும். இது அரசு கிட்டத்தட்ட முழு கடன் வளங்களையும் பயனுள்ள மூலதன செலவினங்களுக்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்துகிறது என்பதை குறிக்கிறது. எனவே கடன்கள் வருவாய் செலவிற்கோ அல்லது உறுதியளிக்கப்பட்ட செலவினங்களுக்காகவோ அல்லது அத்தகைய வகைகளுக்கான எதற்காகவோ செல்லாது. உண்மையில் அரசு கடன் வாங்கிய ஆதாரங்களில் சுமார் 99 சதவீதத்தை வரவிருக்கும் ஆண்டில் பயனுள்ள மூலதன செலவினங்களுக்கு நிதியளிப்பதற்காக பயன்படுத்த விரும்புகின்றது என்றார்.