சென்னை: ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் செயலாளர் கண்டோன்மெண்ட் சி.சண்முகம் மறைவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்ட திமுக செயலாளராகவும் ஆலந்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும், கண்டோன் மெண்ட் துணைத் தலைவராகவும் இருந்து திறம்பட மக்கள் பணியாற்றிய கண்டோன்மெண்ட் சி.சண்முகம் (83) இயற்கையெய்தினார். அவரின் மறைவையொட்டி திமுக தலைவரும் தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி:
ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் கழகத்தை வளர்த்த, கழகமே தனது மூச்சாக இறுதிவரை வாழ்ந்தவர்களில் ஒருவராகத் திகழ்ந்த கண்டோன்மெண்ட் சி.சண்முகம் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகவும் துயருற்றேன். கலைஞர் மீது மிகுந்த பற்று கொண்டவராகத் திகழ்ந்த அவர் கழகத்தின் சார்பில் அனைத்துப் போராட்டங்களிலும் பங்கேற்று முன்னின்று சிறை சென்றவர்.
காஞ்சிபுரம் மாவட்டக் கழகத்திற்கு என்று கலைஞர் பவள விழா மாளிகை கட்டி அதனை கலைஞரின் கரங்களால் திறந்து வைத்தது இன்றும் பசுமையாக என் நினைவில் இருக்கின்றது.கழகமே தனது மூச்சாக இறுதி வரை வாழ்ந்தவர் கண்டோன்மெண்ட் சண்முகம் . அவரை இழந்து வாடும் அவர் தம் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.