‘வஞ்சிக்கும் பாஜவை வீழ்த்துவோம், இந்தியாவை மீட்டெடுப்போம்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் ‘ஸ்பீக்கிங் பார் இந்தியா’ ஆடியோ சீரிஸ் நேற்று வெளியானது. இதில், ஒன்றிய அரசின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் வைத்துள்ளார். முக்கியமாக, மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டி வருகிறது. தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு மிக குறைவு என்பதுதான் வேதனைக்குரியது. ஒன்றிய அரசின் பேச்சும், அவர்களின் செயல்பாடும் எவ்வித சம்பந்தமும் இல்லாமல் இருக்கிறது.
நாட்டில் அனைத்து மாநிலங்களுக்கும் பாரபட்சம் இல்லாமல் நிதியை ஒதுக்குகிறோம் என்று கூறி விட்டு, பாஜ ஆளக்கூடிய மாநிலங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்குவதை ஒன்றிய அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. அனைத்து மாநிலங்களும் வளர்ச்சி அடைந்தால் தான் நாடு வல்லரசு என்ற இலக்கை அடைய முடியும் என்பதை ஒன்றிய அரசு புரிந்து கொள்ள வேண்டும். நாடாளுமன்ற தேர்தலின் போது ஒன்றிய அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சாதனைகளை சொல்லி நாட்டு மக்களிடம் வாக்கு கேட்க ஒன்றிய அரசு பயப்படுகிறது.
தங்கள் ஆட்சியில் மக்கள் செழிப்பாக உள்ளதாக ஒன்றிய அமைச்சர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர். ஆனால், உண்மையில் நிலைமை தலைகீழாக உள்ளது தான் வேதனைக்குரியது. ‘நாங்கள் நன்றாக இருக்கிறோம்’ என நாட்டு மக்கள் சொல்லவில்லை என்பதை ஒன்றிய அரசு தெரிந்துகொள்ள வேண்டும். பாஜ ஆளக்கூடிய மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்தும், அம்மாநிலங்களால் சிறப்பு மிக்க திட்டங்களை கொண்டு வர முடியவில்லை. ஆனால், மிக குறைவான நிதியை ஒன்றிய அரசு ஒதுக்கினாலும், தமிழ்நாடு அரசின் முயற்சியால் நாடே போற்றும் வகையில் பல்வேறு சிறப்பு வாய்ந்த திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்ட கூடாது. இதனால் மாநிலங்களின் வளர்ச்சி பாதிக்கப்படும். முக்கியத்துவம் வாய்ந்த திட்டங்களை கொண்டு வருவதில் காலதாமதம் ஏற்படும். இதனால் மக்கள்தான் பாதிக்கப்படுவார்கள். நாட்டில் அனைத்து மாநிலங்களையும் சரிசமமாக பார்ப்பதாக கூறி விட்டு, தங்கள் கட்சி ஆளக்கூடிய மாநிலங்களுக்கு முன்னுரிமை அளிப்பது உள்ளிட்ட விஷயங்களில் ஒன்றிய அரசு இறங்குவது நல்லதல்ல. குறிப்பாக, பாஜ ஆளாத மாநிலங்களுக்கு பல்வேறு வகையில் ஒன்றிய அரசு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. இதை நாட்டு மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். ஒன்றிய அரசின் ஒவ்வொரு செயல்பாடுகளையும் மக்கள் பார்த்து வருகின்றனர். எனவே மக்களை ஒன்றிய அரசால் ஏமாற்ற முடியாது.
கடந்த காலங்களில் தேர்தல் நேரத்தில் ஒன்றிய அரசால் நடத்தப்பட்ட நாடகங்களை மக்கள் பார்த்துள்ளனர். செய்ய முடியாத திட்டங்களை ஒன்றிய அரசு அறிவித்து பொதுமக்களை ஏமாற்றியதை இன்னும் அவர்கள் மறந்து விடவில்லை. இனி, மக்களை ஏமாற்ற முடியாது என்பது ஒன்றிய அரசுக்கு நன்றாக தெரிந்து விட்டது. ஆகையால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஒன்றிய அரசு பல தில்லாலங்கடி வேலைகளில் இறங்கினாலும் ஆச்சரியமில்லை. பாஜ அரசு ஆட்சிக்கு வந்து 10 ஆண்டுகள் ஆகப்போகிறது. தாங்கள் செய்த திட்டங்களை சொல்லி வாக்கு கேட்க முடியாத நிலையில் ஒன்றிய அரசு உள்ளது. நாட்டுமக்கள் தெளிவாக உள்ளனர். பல்வேறு விஷயங்களில் ஒன்றிய அரசு செயல்பட்ட விதத்தை அவர்கள் மறந்து விடவில்லை. பொய்களை சொல்லி நாட்டுமக்களை ஒருபோதும் ஒன்றிய அரசால், இனி ஏமாற்ற முடியாது.