
சென்னை: ‘காஸ் விலை அடிக்கடி ஏறிக்கொண்டே செல்வதற்கு, அதிகளவில் காஸ் இறக்குமதி செய்வதே விலை ஏற்றத்துக்கு காரணம்’ என்று அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பதில் கூறினார். காஞ்சிபுரம் பழையசீவரம் கிராமத்துக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மற்றும் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் வந்தனர். அங்குள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் வழிப்பட்டனர். பின்னர் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அங்கு கூடியிருந்த பெண்களிடம் தங்கள் பகுதியில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் கிடைக்கிறதா என்று கேட்டார்.
அப்போது அங்குள்ள பெண்கள், ‘‘காஸ் விலை மட்டும் ஏறிக்கொண்டே செல்கிறது. இதனால் காஸ் சிலிண்டர் வாங்குவதற்கு சிரமமாக. சம்பாதிக்கும் பணத்தில் பெரும்பகுதியை அதற்கே தர வேண்டி உள்ளது. விலையை குறைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். அதற்கு பதிலளித்த ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ,‘ நமது நாட்டில் காஸ் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகள் இல்லை. இதனால், வெளிநாடுகளில் இருந்து காஸ் பெறப்படுகிறது. அதனால் அவர்கள் நிர்ணயிக்கும் விலைக்கு ஏற்றார் போல், விலை நிர்ணயம் செய்து பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதனால், காஸ் விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. நீங்கள் வாங்கும் காஸ் சிலிண்டருக்கு தேவையான மானியங்கள் வழங்கப்பட்டு வருகிறது’’ என்று கூறினார்.