திருச்சி: இந்திய பாதுகாப்பு அமைச்சகம் சார்பில், சென்னை பாதுகாப்பு படை கணக்குகள் அலுவலகத்தின் 206வது ஸ்ப்ராஷ், முப்படை ராணுவ வீரர்கள் ஓய்வூதிய குறைதீர் முகாம் திருச்சி, மன்னார்புரம் பகுதியில் உள்ள ராணுவ மைதானத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் என்டிஏ கூட்டணிக்கு அதிமுக தான் தலைமை என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பலமுறை கூறிவிட்டார். அமித்ஷாவும், எடப்பாடியும் எடுக்கும் முடிவுதான் என் முடிவு. இதில் நான் ஒன்றும் கூறுவதற்கு இல்லை.
கட்சிக்குள் மாறுபாடுகள் இருந்தாலும் அதற்கு தீர்வு காணப்படும் என தமிழ்நாடு பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். என்டிஏ முதல்வர் வேட்பாளர் எடப்பாடி தான். என்டிஏ கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது. வேறு எந்த கட்சிகள் என்டிஏவில் கூட்டணி சேரும் என்பது குறித்து தற்போது வெளிப்படையாக கூற முடியாது. கூட்டணி கட்சிகள் குறித்து விரைவில் தெரியவரும், அதற்கு இன்னும் காலம் உள்ளது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை அரசியல் காரணங்களுக்காக சந்திக்கவில்லை. அவர் உலகளவில் ஒரு இசை ஸ்டூடியோவை அமைப்பது குறித்து கூறினார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.