சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள எஃப்ஐஆர்களை அமலாக்கத்துறைக்கு வழங்கும்படி உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சட்டப் பேராசிரியர் ஆர்.கார்த்திகேயன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கை தொடர்ந்தார். அதில்; ஊழலுக்கு எதிராக 2020-21-ல் மட்டும் 553 வழிக்குகளை மஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளின் அடிப்படையில் அமலாக்கத்துறையும் தனியாக வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது. பல வழக்குகளில் எஃப்.ஐ.ஆர். கிடைக்காததால் அமலாக்கத்துறையில் வழக்கை நடத்த முடியாத நிலை உள்ளது.
லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்யும் வழக்கு விவரங்களை அமலாக்கத்துறைக்கு வழங்க உத்தரவிடக் கோரி மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த வழக்கு நீதிமன்றத்தில் இன்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; லஞ்ச ஒழிப்புத்துறையில் நிலுவையில் உள்ள எஃப்ஐஆர்களை அமலாக்கத்துறைக்கு வழங்கும்படி உத்தரவிட முடியாது. லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குகளை அமலாக்கத்துறையிடம் வழங்க எந்த சட்ட பிரிவிலும் அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, அவற்றை வழங்க உத்தரவிட முடியாது. FIR-களை அமலாக்கத்துறையிடம் வழங்க உத்தரவிட வேண்டும் என்ற மனுவை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தள்ளுபடி செய்தார்.