மதுரை: கஞ்சா கடத்தல் வழக்கில் கூலிப்படை தலைவன் உள்பட மூவருக்கு தலா 10 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. வௌிமாநிலத்திலிருந்து சொகுசு காரில் மதுரைக்கு கஞ்சா கடத்தி விற்பனை செய்யப்படுவதாக கீரைத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கடந்த 2021ம் ஆண்டு மதுரை சிந்தாமணி சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனையிட்டனர். அப்போது காரில் 28 கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரியவந்தது.
கஞ்சா கடத்தி வந்த, சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தை சேர்ந்த கூலிப்படை தலைவன் லோடு முருகன் (42), மதுரை அனுப்பானடி பகுதியை சேர்ந்த ரவிக்குமார் (32), மதுரை அண்ணாநகரை சேர்ந்த சதியேந்திரன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு கார், டூவீலர், பணம் ரூ.10 ஆயிரம், 2 கத்திகள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கின் விசாரணை மதுரை மாவட்ட முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் வக்கீல் தங்கேஸ்வரன் ஆஜரானார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பளித்தார். அதில் கஞ்சா கடத்தியது உறுதியானதால் லோடு முருகன், ரவிக்குமார், சதியேந்திரன் ஆகிய மூவருக்கும் 10 ஆண்டுகள் சிறை மற்றும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.