குன்றத்தூர்: குன்றத்தூர் அருகே கஞ்சா விற்பனை தொடர்பான தகராறில், வாலிபர் மீது கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்ட 4 பேர் கொண்ட கும்பலை, போலீசார் தேடி வருகின்றனர். குன்றத்தூர் அடுத்த சிறுகளத்தூர், சரஸ்வதி நகர் பகுதியை சேர்ந்தவர் ஆகாஷ் (எ) பிரதாப் (21). திருமுடிவாக்கம் சிட்கோ பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு ஆகாஷ் தனது தெருவில் நண்பர்களுடன் நின்று பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது, அங்கே வந்த 4 பேர் கும்பல், ஆகாஷிடம் வாய் தகராறு ஈடுபட்டனர். ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த கும்பல் தாங்கள் ஏற்கனவே மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பி, கட்டை போன்ற ஆயுதங்களால் ஆகாஷை சரமாரியாக தாக்க தொடங்கினர். அவரது அலறல் சத்தம் கேட்டு வந்த ஆகாஷின் மாமா நாகராஜ் சண்டையை தடுக்க முற்பட்டார். அவரையும் அந்த கும்பல் சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றது.
இதில், பலத்த காயமடைந்த 2 பேரையும், அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் நடத்திய விசாரணையில், தாக்குதலில் ஈடுபட்டது குன்றத்தூர் அடுத்த கழட்டி பேட்டை, காந்தி நகரை சேர்ந்த மோனு (எ) மோகன் (23), அம்பேத்கர் தெருவை சேர்ந்த வாலி (எ) ராஜேஷ் (24), தீனா மற்றும் வெங்கடேசன் (23) மற்றும் அடையாளம் தெரியாத அவர்களது நண்பர்கள் சிலர் என்பது தெரியவந்தது.
தப்பியோடிய அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இதனிடையே, கஞ்சா விற்பனை தொடர்பாக இந்த தாக்குதல் சம்பவம் நடைபெற்றதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட மோனு (எ) மோகன், வாலி (எ) ராஜேஷ் ஆகிய 2 பேர் மீதும் ஏற்கனவே கொலை முயற்சி, அடிதடி, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளதும், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறை சென்று வந்ததும் குறிப்பிடத்தக்கது.
அதேபோன்று தாக்குதலுக்குள்ளான வாலிபர் ஆகாஷ் மீதும் ஏராளமான வழக்குகள் நிலுவையில் உள்ளது விசாரணையில் தெரியவந்தது. சமீபகாலமாக குன்றத்தூர் புறநகர் பகுதிகளான நந்தம்பாக்கம், பெரியார் நகர் போன்ற பகுதிகளில் கஞ்சா புழக்கம் காரணமாக இதுபோன்ற மோதல்கள் அதிகரித்து வருவதாகவும், அதனை இரும்பு கரம் கொண்டு தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.