பெரம்பூர்: புளியந்தோப்பு தட்டாங்குளம் ருத்ரப்பா தெருவை சேர்ந்தவர் விக்கி (எ) அப்பு விக்கி (28). இவருக்கும், ஓட்டேரி சந்தியப்பன் 1வது தெருவை சேர்ந்த சதீஷ் (30) என்பவருக்கும் முன்விரோதம் உள்ளது. சதீஷ், அதே பகுதியில் கஞ்சா விற்பதாக கூறப்படுகிறது. இதுபற்றி விக்கி, போலீசாருக்கு தகவல் கொடுப்பதாக சதீஷ் நினைத்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, ஓட்டேரி எஸ்.எஸ்.புரம் ஏ- பிளாக் வழியாக விக்கி சென்ற போது சதீஷ், அவரது நண்பர்கள் சேர்ந்து விக்கியை ஆட்டோவில் கடத்தி சென்று, அயனாவரம் வசந்தா கார்டன் பகுதியில் வைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர்.
மேலும், இவ்வாறு தாக்கியதை செல்போனில் வீடியோ எடுத்து ரசித்துள்ளனர். இதுகுறித்து, தலைமை செயலக காலனி போலீசில் விக்கி புகார் கொடுத்துள்ளார். போலீசார் வழக்கு பதிந்து, சதீஷ், நரேன், நம்மாழ்வார்பேட்டை பகுதியை சேர்ந்த சரவணன் ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு கத்தி, ஆட்டோவை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள ராஜேஷ், நிர்மல் ஆகியோரை தேடி வருகின்றனர்.