காரைக்குடி: காரைக்குடி அருகே, 122 கிலோ கஞ்சா பறிமுதல் வழக்கில் தலைமறைவாகி கோவையில் பதுங்கியிருந்த 3 பேரை, குன்றக்குடி போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, பாதரக்குடியில் திருச்சி-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் குன்றக்குடி போலீசார் கடந்த ஜூன் மாதம் ரோந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் டூவீலருடன் நின்றிருந்த 8 பேர், போலீசை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடினர். இதையடுத்து போலீசார் அந்தப் பகுதியில் உள்ள பாலத்தின் கீழே சென்று பார்த்தபோது, 122 கிலோ கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், தப்பியோடியவர்களில் 5 பேரை 24 மணி நேரத்தில் திருச்சி அருகே மடக்கி பிடித்து கைது செய்தனர்.
இந்த வழக்கில் எஞ்சிய 3 பேர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தனர். இந்நிலையில் அவர்கள் கோயம்புத்தூரில் பதுங்கி இருந்தது விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து குன்றக்குடி போலீசார் கோவை விரைந்தனர். அங்கு பதுங்கியிருந்த காரைக்குடியைச் சேர்ந்த முத்து இருளாண்டி மகன் திருப்பதி (22), அருணாசலம் மகன் மணிவாசகம் (22), சரவணன் மகன் மலைராஜ் (22) ஆகிய மூவரையும் நேற்று அதிரடியாக கைது செய்தனர். இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்ட காரைக்குடி டிஎஸ்பி பிரகாஷ், இன்ஸ்பெக்டர் ரவீந்திரன், எஸ்.ஐ.க்கள் பிரேம்குமார், ராமநாதன் மற்றும் போலீசாருக்கு மாவட்ட எஸ்பி டோங்கரே பிரவீன் உமேஷ் பாராட்டு தெரிவித்தார்.