ஊட்டி : போர்களில் உயிரிழந்தவர்களுக்காகவும், வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கும் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஊட்டியில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஊட்டி ஒய்எம்சிஏ மற்றும் ஊட்டி நகர மக்கள் விழிப்புணர்வு சங்கம் சார்பில் ஹிரோஷிமா தினம் போர் எதிர்ப்பு தினமாக அனுசரிக்கப்பட்டது. ஒய்எம்சிஏ செயலாளர் மேக்ஸ் வில்லியர்ட் ஜெயபிரகாஷ் வரவேற்றார். போர் இல்லா நல் உலகம் என்ற தலைப்பில் சர்வ சமய தலைவர்களின் கருத்தரங்கு நடைபெற்றது.
கிறிஸ்தவ சமயத்தின் சார்பாக ஜேகப் ஜெயவீரன் போரின் விளைவுகள் என்ற தலைப்பில் பேசினார். தர்ம பரிபாலன சபையின் சார்பாக முனீஸ்வரி வீட்டில் இருந்து அமைதியை நாட்டிற்கு கொண்டு செல்வோம் என்று பேசினார். அதைத்தொடர்ந்து பெரியோர்கள், குழந்தைகள் முன்பு வாக்குவாதம் செய்வதை தவிர்த்திட வேண்டும் என இஸ்லாமிய மத பிரதிநிதி ரிஸ்வான் உரையாற்றினார். பஹாய் சமய தலைவர் பெகருஸ் இப்பூவுலகை காக்க இந்நாளில் அமைதி மேற்கொள்ள வேண்டும் என்றார். விழிப்பணர்வு சங்க தலைவர் ஜனார்தனன் பேசுகையில், மத நல்லிணக்கத்திற்கான தேவை அதிகரிக்க வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சிக்கு பிறகு இளம் வயலின் இசைக்கலைஞர் ஜோஷ்வா ரோஷனின் பின்னணி இசையுடன் போரால் உயிரிழந்தோருக்கும், அண்மையில் வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தோருக்கும் ஆன்ம சாந்தியடைய மெழுகுவர்த்தி அஞ்சலி நிகழ்ச்சி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடப்பட்டது. ஒய்எம்சிஏ பள்ளி முதல்வர் எப்சிபா தொகுத்து வழங்கினார். பள்ளி ஆசிரியர் ஷாலினி நன்றி கூறினார்.