Thursday, April 18, 2024
Home » அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிப்பு: தேர்தல் களம் சூடுபிடித்தது.! முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினர்

அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் அறிவிப்பு: தேர்தல் களம் சூடுபிடித்தது.! முதல்வர் மு.க.ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரத்தை தொடங்கினர்

by Mahaprabhu

சென்னை: அனைத்துக் கட்சிகளிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். வேட்பாளர்கள் தொகுதிகளில் முகாமிட்டு தேர்தல் பணிகளை தொடங்கிவிட்டனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிரசாரத்தை தொடங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி இன்று பிரசாரத்தை தொடங்குகிறார். மற்ற கட்சிகளின் தலைவர்களும் தேர்தல் கூட்டங்களில் கலந்து கொண்டு பேசி வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. முதல் கட்ட தேர்தல் வருகிற ஏப்ரல் 19ம் தேதி நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுவை என 40 தொகுதிகளுக்கும் முதல் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மும்முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. திமுக(21 தொகுதிகள்) தலைமையில் காங்கிரஸ்(10), மார்க்சிஸ்ட்(2), இந்திய கம்யூனிஸ்ட்(2), மதிமுக(1), விசிக(2), கொமதேக(1), இந்திய யூனியன் முஸ்லிம் லீக்(1) ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் உள்ள மமக, தவாக, தமிழர் விடுதலைக் கழகம், மஜக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

அதைத் தவிர மேலும் பல அமைப்புகள், சிறிய கட்சிகள் தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகின்றன. அதேபோல நேற்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினை 16 கட்சிகள், இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சந்தித்து முழு ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேேபால அதிமுக (33) கூட்டணியில் தேமுதிக(5), எஸ்டிபிஐ(1), புதிய தமிழகம்(1) ஆகிய கட்சிகள் ேபாட்டியிடுகின்றன. அதிமுகவுக்கும் சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. 3வது அணியாக பாஜக களத்தில் நிற்கிறது. பாஜ(21) கூட்டணியில் பெரும்பாலும் சாதி கட்சிகளின் தலைவர்கள் சேர்ந்துள்ளனர். அதில், பாமக(10), தமாகா(3), அமமுக(1), அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு(1), புதிய நீதிக்கட்சி(1), ஐஜேகே(1), தமமுக(1), இந்திய மக்கள் கல்விக்கழகம்(1) ஆகிய கட்சிகள் போட்டியிடுகின்றன. இது தவிர நாம் தமிழர் கட்சியினர் தனியாக 40 தொகுதிகளிலும் சுயேட்சைகளாக களம் காண்கின்றனர். எனினும் தமிழகத்தில் மும்முனைப் போட்டிதான் உருவாகியுள்ளது. திமுக கூட்டணியைப் பொறுத்தவரை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் மாலை திருச்சியில் திமுக வேட்பாளர் அருண் நேரு(பெரம்பலூர்), மதிமுக வேட்பாளர் துரை வைகோ(திருச்சி) ஆகியோரை ஆதரித்து பிரசாரம் செய்தார்.

நேற்று காலை தஞ்சையில் நடைப்பயிற்சி மேற்கொள்வோரிடம் வேட்பாளர் முரசொலியை ஆதரித்து பிரசாரம் செய்தார். மாலையில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். தேர்தல் பிரசாரம் முடியும் ஏப்ரல் 17ம் தேதி வரை பிரசார கூட்டங்களில் கலந்து கொள்கிறார். கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களான வைகோ, பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் ஆகியோரும் தீவிர பிரசாரத்தில் இறங்கியுள்ளனர். அதிமுகவைப் பொறுத்தவரை எடப்பாடி பழனிசாமி, இன்று தனது பிரசாரத்தை திருச்சியில் தொடங்குகிறார். அந்தக் கூட்டத்தில் அதிமுக கூட்டணியில் போட்டியிடும் 40 வேட்பாளர்களையும் அவர் அறிமுகம் செய்து வைக்கிறார். அதன்பின்னர் தமிழகம் முழுவதும் பிரசாரம் மேற்கொள்கிறார். பாஜவைப் பொறுத்தவரை மாநில தலைவர் அண்ணாமலை கோவையில் போட்டியிடுவதால், அங்கு தனது பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். மேலும் அவர் தலைமையில் தமிழக பிரசாரத்தை நடத்த டெல்லி மேலிடம் விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் தமிழகத்துக்கு தேர்தல் பொறுப்பாளர்களைப் போட்டு பிரசாரம் மேற்கொள்ள பாஜக திட்டமிட்டுள்ளது.

ஆனாலும் கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த அனைத்து சிறிய கட்சிகளின் தலைவர்களும் போட்டியிடுவதால் அவர்கள், அவர்களது தொகுதிகளில் முடங்கியுள்ளனர். இதனால் ஒன்றிய அமைச்சர்கள் தமிழகத்தில் பிரசாரத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளனர். இவ்வாறு 3 கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் தவிர மற்ற 30 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டனர். அதிமுக, பாஜக கூட்டணியில் 40 தொகுதிகளுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். இதனால் பெரும்பாலான வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு விட்டதால், அவர்கள் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்யும் பணிகள் மற்றும் ஊழியர்கள் கூட்டங்கள், கட்சித் தலைவர்களுடன் சந்திப்பு, நிர்வாகிகளுடன் ஆலோசனை என இரவு, பகல் பாராது தேர்தல் பணிகளை தொடங்கி நடத்தி வருகின்றனர். இதனால் தமிழக தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.

You may also like

Leave a Comment

15 − 10 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi