சென்னை: சிவில் நீதிபதி மெயின் தேர்வில் குளறுபடி நடந்துள்ளதா என்பதற்கு டிஎன்பிஎஸ்சி விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) தமிழ்நாடு மாநில நீதித்துறையில் சிவில் நீதிபதி பதவியில் அடங்கிய 245 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான மெயின் தேர்வை அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம், நேற்று என 2 நாட்கள் மெயின் தேர்வு நடந்தது. சென்னையில் மட்டும் இந்த தேர்வு நடந்தது. மெயின் தேர்வை 2,526 பேர் எழுதினர்.
முதல் நாள் காலையில் மொழி பெயர்ப்பு தேர்வும், பிற்பகலில் சட்டம் சார்ந்த முதல் தாள் தேர்வும் நடந்தது. நேற்று 2வது நாள் தேர்வு நடந்தது. காலையில் சட்டம் சார்ந்த 2ம் தாள் தேர்வு நடந்தது. இதில் வடசென்னை தேர்வு மையம் ஒன்றில் பிற்பகலில் நடைபெற இருந்த தேர்வுக்கான கேள்வித்தாளை, காலையில் நடந்த தேர்வில் கொடுக்கப்பட்டதாக தேர்வர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் கூறியதாவது:
சிவில் நீதிபதி முதன்மை தேர்வுக்கான 2ம் நாள் தேர்வு இன்று (நேற்று) காலை, மாலை என நடந்தது. காலையில் சட்டம் சார்ந்த 2ம் தாள் தேர்வும், பிற்பகலில் சட்டம் சார்ந்த 3ம் தாள் தேர்வும் நடந்தது. காலையில் நடந்த தேர்வில் சில தேர்வர்கள் மூன்றாம் தாள் தேர்வுக்கான வினாக்கள், 2ம் தாளுக்கான வினாக்களில் கேட்கப்பட்டு இருப்பதாக கூறியிருந்தனர். சிவில் நீதிபதி தேர்வை பொறுத்தவரைக்கும் டிஎன்பிஎஸ்சி கேள்வித்தாள்களை தயார் செய்வது இல்லை.
கேள்விதாள்களை தயார் செய்வது சென்னை உயர் நீதிமன்றம் தான். எனவே, தேர்வர்கள் கூறிய கருத்துக்களை சென்னை உயர் நீதிமன்ற பதிவாளரிடத்தில் உடனடியாக எடுத்து செல்லப்பட்டது. தேர்வர்கள் கூறிய கருத்து அவரிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்களும் இதை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதி கமிட்டிக்கு தெரியப்படுத்துகிறோம் என்று தெரிவித்தனர். அதே நேரத்தில் நீங்கள் தேர்வை அட்டவணைப்படி நடத்துங்கள் என்று கூறினர். அதனால், டிஎன்பிஎஸ்சியும் தேர்வை நடத்தியது.
சிவில் நீதிபதி தேர்வை பொறுத்தவரைக்கும் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி தான் டிஎன்பிஎஸ்சி நடத்துகிறது. முழுக்க, முழுக்க அவர்களின் உயர் நீதிமன்றத்தின் கண்காணிப்பு, அவர்களின் துறைகளில் இருக்கின்ற விதிகளின் அடிப்படையில் தான் தேர்வு நடைபெறுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர். சென்னை ஆர்.ஏ.புரம் ஆண்டனி பள்ளியில் நடைபெற்ற தேர்வை டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமா மகேஸ்வரி ஆய்வு மேற்கொண்டார். இதேபோல மற்ற மையங்களில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் மற்றும் உயர் நீதிமன்றம் நீதிபதிகள் ஆய்வு நடத்தினர்.