‘‘தாமரை, மாம்பழ கட்சிகளின் நிர்வாகிகளை நம்பி மோசம்போன பிரபல வேட்பாளர் கவலையில மூழ்கிட்டாராமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா. ‘‘வெயிலூர் தொகுதியில தாமரை கட்சி கூட்டணியில மூன்று ஆங்கில எழுத்தை சுருக்கமா கொண்டவர் 3வது முறையாக போட்டியிட்டாரு.. தேர்தலுக்கு முன்பே தனது கட்சியில புதிய நிர்வாகிகளை நியமனம் செய்து எப்படியாவது ஜெயிச்சிடணும்னு களப்பணியில இறங்கினாரு..
தொகுதி முழுக்க தாமரைக் கட்சிக்கு தனியாக பூத் கமிட்டிகள் இருக்கிறதாகவும், கட்சி பெரிய அளவில் முன்னேறிட்டதாகவும், தொகுதியில தாமரைக்காரங்க இல்லாத இடமே இல்லைன்னு மூன்று எழுத்துக்காரரிடம் தாமரைக்கட்சி நிர்வாகிகள் வார்த்தை ஜாலத்தை அள்ளி வீசினாங்களாம்.. இத முழுசா நம்பிய மூன்றெழுத்துக்காரர் பூ கட்சிக்காரங்க சொல்லுறத எல்லாம் நம்பி பெரிய தொகைகளை எல்லாம் அள்ளி அள்ளி கொடுத்தாராம்..
கடைசியில் கூட்டணியில சேர்ந்த மாம்பழம் கட்சியினரும் ஒரு பக்கம் எங்களுக்கு குறிப்பிட்ட தொகுதிகளில் 20 சதவீதத்திற்கு மேல் வாக்குகள் இருக்கு.. இந்த முறை அந்த வாக்குகளை எல்லாம் மொத்தமா அறுவடை செய்திடலாம்னு ெசால்லியே வேட்பாளரிடம் ஒரு பெரிய தொகையை அறுவடை செய்துவிட்டாங்களாம்.. ஆனா தேர்தல் முடிவுகள பார்த்ததும் மூன்று எழுத்துக்காரரோட முகமே மாறிடுச்சாம்.. காரணம், பல பூத்களில் பூஜ்ஜியம் வாக்குகளும், ஒற்றை, இரட்டை இலக்கத்தில் வாக்குகளும் கிடைச்சுதாம்..
இதபற்றி அவர் விசாரிச்சப்போ வாக்காளர்களுக்காக கொடுத்து அனுப்பிய ப வைட்டமின் சரியா சென்று சேரவில்லைனு தெரியவந்துச்சாம்.. அதுபோல எல்லா இடங்களிலுமே பூத் ஏஜென்ட் இருப்பதாக கூறி பெரிய பொய் சொல்லி தாமரை நிர்வாகிங்க சுற்றித்திரிஞ்சாங்க.. ஆனா 25 சதவீத பூத்களில் கூட ஆளே இல்லையாம்.. பூத் கமிட்டிக்குன்னு கொடுத்த தொகையை கூட கொடுக்காமல் தாமரை, மாம்பழம் மாவட்ட நிர்வாகிங்க முழுமையா அமுக்கியதால கட்சி பணியாற்ற யாரும் ஆர்வத்ேதாட வரவில்லையாம்..
3 முறை போட்டியிட்டாலும், இந்த முறைதான் 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்துள்ளார்.. 2 கட்சிக்காரங்களும் அள்ளிவிட்டதை நம்பி மோசம் போயிட்டமேன்னு கவலையில இருக்கிறாராம் மூன்று எழுத்துக்காரர்..’’ என்றார் விக்கியானந்தா. ‘‘தலைமையின் பனிப்போரால் வெற்றி பறிபோய்விட்டதுன்னு குமுறுகிறாராமே முட்டையூர் இலைக்கட்சி வேட்பாளர்..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘முட்டைக்கு பேமசான நகரத்துல இலைக்கட்சி வேட்பாளராக களத்தில் குதிக்க திட்டமிட்ட பிரபல தொழிலதிபர், கட்சியின் தலைவரை கவரும் வகையில் பலகட்ட நடவடிக்கையில் இறங்கினாராம்.. எனக்கு சீட் கொடுத்தால் வெற்றி பெறுவது உறுதின்னு கொடுத்த வாக்குறுதியின் பலனாக வேட்பாளராக நிறுத்த தலைமை உறுதி கொடுத்ததாம்.. இதனால அவர் தனது நிறுவனங்களின் பெயரில் தொகுதி முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி பெண் வாக்காளர்களை கவரும் நடவடிக்கையில் தீவிரம் காட்டினாரு..
மலைவாழ் மக்களுக்கு விளையாட்டுப்போட்டி, விதவிதமான உணவு வகைகளை வாரி வாரி வழங்கினாரு.. லேடீசுக்கு பிரியாணி சமையல் போட்டி நடத்தி பரிசுகளை அள்ளிக் கொடுத்தாரு.. இவரது வேலைகளை பார்த்த கட்சி தலைமையோ வேட்பாளராக அவரையே அறிவிச்சது.. மீண்டும் வேகமெடுத்த வேட்பாளர் வாக்குறுதிகளை அள்வி அள்ளி விட்டிருக்காரு.. எனது வெற்றி உறுதியாகிவிட்டதுனு கூறியபடி கட்சியின் நிர்வாகிகளை அழைத்து கமகமக்கும் அசைவ உணவு வகைகளை போட்டு அசத்தியிருக்காரு..
ஆனால் அவர் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்திட்டாரு.. இதனால ஷாக்காகிப்போயிட்டாராம்.. நம்பிய கட்சிக்காரங்கல்லாம் உன்னை கைவிட்டுட்டாங்கன்னு ரொம்பவே பொருமிக்கிட்டு இருக்காராம்.. அதே நேரத்துல தலைமை மீது அவருக்கு கோபம் இருப்பதாவும் கட்சிக்காரங்க சொல்றாங்க. ‘மலராத கட்சியுடன் கூட்டணி அமைச்சிருந்தால் வெற்றி கோப்பையை தட்டியிருப்பேன். தலைமையில இருக்கிற இருதரப்புக்கும் ஏற்பட்ட பனிப்போரால் எனது வெற்றி பறிபோய் விட்டது’ன்னு தன்னை சந்திக்க வருபவர்களிடம் குமுறுவதாக ரத்தத்தின் ரத்தங்கள் சொல்றாங்க…’’ என்றார் விக்கியானந்தா.
‘‘மேடை பேச்சுல மாஜிக்களை கண்ணீர்விட செய்த வேட்பாளரே ரிசல்ட்டுக்கு அப்புறம் கதறும் நிலைக்கு போன பரிதாபத்தை சொல்லுங்க..’’ என்றார் பீட்டர் மாமா. ‘‘பூட்டுக்கு புகழ் பெற்ற தொகுதியில் இலைக்கட்சி கூட்டணி சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்டவர், தனக்கு 2 மாஜி அமைச்சர்களும் பக்கபலமாக இருப்பார்கள் என எண்ணினார். மேடையில் பேசும்போது கூட உளறல் மாஜி, ஷாக் மாஜி அமைச்சர்களை தனது பெற்றோருக்கு நிகரானவர்கள் எனக்கூறி, மாஜிக்களை கண்ணீர் விட வைத்தார்.
அங்கு கண்ணீர் விட்டதோடு சரி.. அதன் பின்னர் கதறியது எல்லாம் வேட்பாளர்தானாம்… துவக்கத்தில் ஆதரவாக வேலை பார்ப்பது போல காட்டிக்கொண்ட இருவரும், தீவிர பிரசார நேரத்தில், உடன் செல்லாமல் ஒதுங்கிக் கொண்டனர். ஆதரவாளர்களையும் உடன் செல்ல வேண்டாமென கூறி விட்டனராம்.. இதனால் தனித்தீவான வேட்பாளர், பூட்டு தொகுதியை ஏன் கேட்டு வாங்கினோம்னு நெருக்கமானவர்களிடம் புலம்பித் தள்ளினாராம்…
இதில் முக்கியமாக உளறல் மாஜியின் பூட்டு சட்டமன்ற ெதாகுதியில் சுமார் 73,896 ஓட்டுக்கள் குறைவாக பெற்றுள்ளார். இதேபோல் மாஜி ஷாக் அமைச்சர் தொகுதியிலும் 72,896 ஓட்டுக்கள் குறைவாக பெற்றுள்ளார். 2 முக்கிய மாஜிக்கள் இருந்தும், அவர்களது தொகுதியிலேயே ஓட்டு கடுமையாக குறைந்ததால் வேட்பாளராக போட்டியிட்டவர் அதிருப்தியில் உள்ளாராம்…’’ என்றார் விக்கியானந்தா.