டெல்லி: இந்தியாவில் புற்று நோயால் பாதிக்கப்பட்ட 5 பேரில் 3 பேர் உயிரிழப்பதாகவும், அதில் பெண்களே பெரும்பான்மை எனவும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் வயது வாரியாக 36 வகை புற்றுநோய் பாதிப்புகளுக்கு உள்ளானவர்களின் தரவுகளை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அதன் முடிவுகளில் புற்றுநோய் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 3வது இடத்திலும், சீனா, அமெரிக்கா முதல் 2 இடங்களிலும் உள்ளது தெரிய வந்துள்ளது.
புற்றுநோயால் ஏற்படும் மரணங்களின் 10 சதவீதத்துடன் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியா உள்ளது. மார்பக புற்றுநோயால் 30% பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் ஏற்படும் மரணம் 24% என்ற அளவிலும் உள்ளது. கருப்பை வாய் புற்றுநோயால் பாதிக்கப்படும் 10% பெண்களில் 20% அளவிற்கு இறப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது. புற்றுநோயால் பாதிக்கப்படும் ஆண்களில் வாய் புற்றுநோய் பாதிப்பு 16% பேரிடம் இருப்பதாகவும் சுவாசம் மற்றும் உணவுக்குழாய் பாதிப்பு அடுத்தடுத்த இடங்களில் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
புற்றுநோயால் 70 வயதுக்கு மேற்பட்டவர்கள் அதிகம் பாதிக்கப்படுவதாகவும், அதற்கு அடுத்தப்படியாக 15 முதல் 49 வயதுக்கு உட்பட்டவர்களும் உள்ளது தெரிய வந்துள்ளது. புற்றுநோய் மரங்களில் 70% மத்திய வயது உள்ளவர்களிடம் நிகழ்வதால் நோயை விரைந்து கண்டறிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.