சென்னை: சிறுமியின் தொடை எலும்பு புற்றுநோய்க்கு தொடை எலும்பு மாற்று சிகிச்சையை வெற்றிகரமாக செய்து கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை சாதனை படைத்துள்ளது. கொளத்தூரை சேர்ந்த 8 வயது சிறுமி, தொடையில் புற்றுநோய் கட்டியுடன் கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தாள். இதுபோன்ற புற்றுநோய் வருவது மிகவும் அரிதானது. அந்த சிறுமிக்கு 3 மாதம் கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, பரிசோதனை செய்ததில் தொடை எலும்பில் புற்றுநோய் கட்டி பெரிய அளவில் இருப்பது தெரியவந்தது.
இதனால் அந்த தொடை எலும்பு முழுவதையும் அகற்ற திட்டமிட்டனர். அந்த எலும்பிற்கு பதிலாக டைட்டானியம் உலோகத்தினால் உருவாக்கப்பட்ட தொடை எலும்பு (Titanium custom made prosthesis) வைக்க முடிவு செய்தனர். மருத்துவமனை இயக்குனர் பார்த்தசாரதி ஆலோசனைபடி அந்த டைட்டானியம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட தொடை எலும்பு ஆர்டர் செய்யப்பட்டு வரவழைக்கப்பட்டது.
பின்னர் புற்றுநோய் அறுவை சிகிச்சை நிபுணர் சுஜய் சுசிகர் தலைமையில் கிட்டத்தட்ட 3 மணி நேரம் செய்யப்பட்ட அறுவை சிகிச்சையில் அந்த சிறுமியின் தொடை எலும்பு அகற்றப்பட்டு டைட்டானியம் உலோகத்தால் உருவாக்கப்பட்ட எலும்பு வெற்றிகரமாக வைக்கப்பட்டது. தனியார் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 8 லட்சம் வரை செலவாகும் இந்த தொடை எலும்பு மாற்று சிகிச்சை இங்கு இலவசமாக செய்யப்பட்டது.
மேலும் சிறுமியின் மற்றொரு கால் இயற்கையாக வளரும் என்பதால் அதற்கு ஏற்றார் போல் இந்த டைட்டானியம் உலோகத்தின் உருவாக்கப்பட்ட தொடை எலும்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. தற்போது சிறுமி நலமுடன் இருப்பதாகவும், ஒரு வாரத்தில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவாள் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.